×

பாங்காக் நாட்டுக்கு கூலி வேலைக்கு அனுப்பி ரூ10 லட்சம் மோசடி; தொழிலதிபர் கைது

சென்னை: வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக சுற்றுலா விசாவில் பாங்காக் நாட்டுக்கு கூலி வேலைக்காக அனுப்பி ரூ10 லட்சம் மோசடி செய்த தொழிலதிபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் காரைக்குடி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் பெரியண்ணாபாபு (31). இவர், வெளிநாடு செல்ல முயற்சி செய்தபோது சென்னை மேற்கு மாம்பலத்தில் சாய் பாபா எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தும் அருள் என்பவரின் நட்பு கிடைத்துள்ளது.

அப்போது பெரியண்ணாபாபு வெளிநாடு செல்ல விரும்புவதாக அருளிடம் கூறியுள்ளார். அதற்கு அவர், தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் பாங்காக் அனுப்புவதாக தெரிவித்துள்ளார். இதற்காக அருள் ரூ10 லட்சம் செலவாகும் என்று தெரிவித்துள்ளார். எனவே வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசையில் பெரியண்ணாபாபு தொழிலதிபர் அருள் கேட்ட ரூ10 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். அதன்படி அருள், பெரியண்ணாபாபுவை பாங்காக் அனுப்பி உள்ளார். அங்கு சென்ற பிறகு தான் சுற்றுலா விசாவில் பாங்காக் அனுப்பியது தெரியவந்தது. இதுகுறித்து அருளிடம் கேட்டபோது, ‘‘பணிக்கான விசா கிடைக்கும் வரை கூலி வேலை செய்’’ என கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெரியண்ணாபாபு பல கஷ்டங்களுக்கு இடையே சென்னை திரும்பினார். பின்னர் சம்பவம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெரியண்ணா பாபு புகாரளித்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சாய் பாபா என்டர்பிரைசஸ் நடத்தி வரும் அருளை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அருள் இதுபோல் பலரை ஏமாற்றி டூரிஸ்ட் விசாவில் வெளிநாடுகளுக்கு அனுப்பி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொழிலதிபர் அருளை கைது செய்தனர்.

Tags : Bangkok ,country Businessman , Wage work, Rs 10 lakh fraud, businessman
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்