×

மாநகராட்சியின் அங்கீகார அட்டை இருந்தும் முன்னறிவிப்பு இன்றி 200 கடைகள் அகற்றம்

துரைப்பாக்கம்: சென்னை கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் பகுதியில் சாலையோரத்தை ஆக்கிரமித்து கட்டிய 200க்கும் மேற்பட்ட கடைகளை பொக்லைன் இயந்திரம் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் 195வது வார்டுக்கு உட்பட்ட கண்ணகி நகரில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. இதன் அருகே உள்ள எழில் நகர் பகுதியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் சைதாப்பேட்டை, பட்டினப்பாக்கம், தேனாம்பேட்டை, புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டவர்கள்.  இவ்வாறு குடியமர்த்தப்பட்ட நாள் முதல் இவர்கள் வீட்டின் முன்புற பகுதியிலும், சாலையோரத்திலும் 200க்கு மேற்பட்ட சிறுசிறு கடைகள் வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரத்துடன் நேற்று வந்து, ‘‘இதுபோல் இந்த பகுதியில் கடைகளை அமைக்கக்கூடாது’’ என எச்சரிக்கை விடுத்து அனைத்து கடைகளையும் அகற்றினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, சாந்தோம், புதுப்பேட்டை, கொருக்குப்பேட்டை, பட்டினப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வசித்து வந்தோம். அங்கிருந்து அகற்றினர். கடந்த 2012ம் ஆண்டு முதல் இங்கு குடியமர்த்தினர். கடை நடத்தி, அதில் வரும் வருவாயை வைத்துதான் வாழ்க்கை நடத்தி வருகிறோம். இங்கு கடை நடத்துபவர்கள், தமிழ்நாடு அரசு பெருநகர சென்னை மாநகராட்சி தெருவோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை வழங்கியுள்ளனர். தற்போது முன்னறிவிப்பு இல்லாமல் கடைகளை அகற்றுகின்றனர். நாங்கள் வசித்து வந்த பகுதிகளில் இருந்து எங்களை விரட்டி விட்டார்கள். போதிய வருவாய் இல்லாமல் சிறுசிறு கடைகள் வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றோம். ஆனால் திடீரென இப்படி அகற்றிவிட்டனர்.  இதனால் வாழ்வாதாரம் பாதிக்கும். உயரதிகாரிகள் எங்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றனர்.

Tags : corporation ,stores , Corporation, Authority Card, Shops Removal
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...