×

தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு அதிமுக, திமுகவினர் இடையே மோதல்

தாம்பரம்: தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை ஜமாபந்தி கூட்டம் தாம்பரம் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், தாம்பரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கலந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை  தலைவரும், அதிமுக நகர செயலாளருமான கூத்தன் தலைமையில் அதிமுகவினர் ஜமாபந்தி நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.
 
பின்னர் ஜமாபந்தி கூட்டத்தை ஏன் காலதாமதமாக ஆரம்பித்தீர்கள்? என கோட்டாட்சியரிடம் கேட்டபடி அதிமுக நகர செயலாளர் கூத்தன் ஜமாபந்தி நடைபெற்ற மேடையில் அமர்ந்தார். அதற்கு திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் பிரதிநிதிகள் தான் மேடையில் அமர வேண்டும். எந்த அடிப்படையில் அதிமுக நகர செயலாளர் மேடையில் அமரலாம்? என கோட்டாட்சியர் ராஜ்குமாரை பார்த்து கேட்டார். இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டு நாற்காலிகள் மற்றும் செருப்புகளை வீசி ரகளையில் ஈடுபட்டனர்.

இரு தரப்பினருக்கும் மோதல் அதிகரித்ததால் பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி, தாம்பரம் உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். அதிமுகவினர், திமுகவினரை கண்டித்தும், திமுகவினர் அதிமுக மற்றும் வருவாய் துறையினரை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதன் பின்னரும் இரு தரப்பினரும் நாற்காலிகள் மற்றும் செருப்புகளை தூக்கி வீசி தாக்கி கொண்டனர். இதில் பெண் சப்.இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது விழுந்தது.

இதனையடுத்து கோட்டாட்சியர் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தை ரத்து செய்து விட்டு சென்றனர். ஆனால் கூட்டத்தை நடத்த வேண்டும் என கோரி ஜமாபந்தி நடைபெற்ற இடத்தில் திமுகவினர் திரண்டு இருந்தனர். கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், அதிமுக, திமுக இரு தரப்பினரும் தாலுகா அலுவலகத்தில் இருந்து வெளியேறினர். இதுகுறித்து தாம்பரம் கோட்டாட்சியர் ராஜ்குமார் கூறுகையில், ‘ஜமாபந்தி கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த கூட்டங்களின் போது ரத்து செய்யப்பட்ட ஜமாபந்தி கூட்டம் நடைபெறும்’’ என்றார். தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா கூறுகையில், ‘ஜமாபந்தியில் மனு அளிக்க 300 பொதுமக்கள் வந்திருந்தனர். மோதலை காரணம் காட்டி கோட்டாட்சியர் ராஜ்குமார் ஜமாபந்தி கூட்டத்தை ரத்து செய்துள்ளார். தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் மக்கள் நல பணிகள் நடப்பதில்லை. மனுக்கள் வழங்கும் பொதுமக்களை அலைக்கழிக்கின்றனர். தரகர்களை வைத்து கொண்டு ஆளும் கட்சிக்கு ஆதரவாக பல்வேறு முறைகேடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரச்சனைகளில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Clash ,AIADMK ,office ,Tambaram taluk , Tambaram, AIADMK, DMK, conflict
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...