×

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் 35 தொகுதிகளில் சந்திர பாபுவின் வெற்றியை பறித்த பவன் கல்யாண்

அமராவதி: ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் படுதோல்விக்கு நடிகர் பவன் கல்யாண் புதிதாக கட்சி தொடங்கியதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. ஆளும் கட்சியாக இருந்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் படுதோல்வியை சந்தித்தது. இங்குள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 25 மக்களவை தொகுதிகளில் வெறும் 3 இடங்களில் மட்டுமே வென்றது.

இம்முறை பிரபல நடிகர் பவன் கல்யாண், ஜனசேனா என்ற புதிய கட்சியை தொடங்கி முதல் முறையாக தேர்தலை சந்தித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இக்கட்சி, ஒரே ஒரு சட்டப்பேரவை தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. கட்சி தலைவரான பவன் கல்யாண் போட்டியிட்ட 2 தொகுதியிலும் தோல்வியை தழுவினார். ஜனசேனாவின் வருகை ஆந்திர அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தா விட்டாலும், தெலுங்கு தேசத்திற்கு சற்று பாதிப்பையே தந்துள்ளது. குறிப்பாக, தெலுங்கு தேசத்திற்கு கிடைக்க வேண்டிய கபு சமூகத்தினரின் வாக்குகளை பவன் கல்யாண் பிரித்துள்ளார். 35 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வெறும் 2,000 முதல் 10,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. அந்த தொகுதிகளில் பவன் கல்யாணின் ஜனசேனா கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. இந்த 35 தொகுதிகளில் பவன் கல்யாணின் கட்சியால் தெலுங்கு தேசம் தோல்வியை தழுவி உள்ளது.

நரசாபுரம், பீமாவரம் போன்ற தொகுதிகளில் தெலுங்கு தேசத்தை முந்தி 2வது இடத்தையும் ஜனசேனா பெற்றுள்ளது. நரசாபுரத்தில் ஜனசேனா வேட்பாளர் 48,701 ஓட்டுகளுடன் 2ம் இடமும், தெலுங்கு  தேசம் வேட்பாளர் 26,514 ஓட்டுடன் 3வது இடத்தையும் பெற்றுள்ளனர். பீமாவரம் தொகுதியில் ஜனசேனா 62,285 ஓட்டுகளுடன் 2ம் இடமும், தெலுங்கு தேசம் 54,037 ஓட்டுகளுடன் 3வது இடமும் பெற்றுள்ளது. ஒருவேளை இத்தேர்தலில் ஜனசேனா கட்சி வாக்குகளை பிரிக்காமல் இருந்திருந்தால், தெலுங்கு தேசம் கிட்டத்தட்ட 57 தொகுதிகளை கைப்பற்றி கவுரவமான தோல்வியையாவது எட்டியிருக்கலாம். இதேபோல், நடிகர் சிரஞ்சீவி தொடங்கிய பிரஜா ராஜ்யம் கட்சியால், கடந்த 2009ல் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அப்போது, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டியின் தலைமையிலான காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.

Tags : Pawan Kalyan ,victory ,Chandra Babu ,Andhra Pradesh Assembly , Andhra Pradesh election, Chandra Babu, Bhavan Kalyan
× RELATED ஆந்திராவில் ஜனசேனா கட்சி தலைவர்...