×

லண்டனில் இன்று கோலாகல தொடக்கம்: பட்டம் வெல்ல 10 அணிகள் பலப்பரீட்சை

லண்டன்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா மோதுகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 12வது உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரை இங்கிலாந்து, வேல்ஸ் நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட மொத்தம் 10 அணிகள் கோப்பையை முத்தமிடும் முனைப்புடன் வரிந்துகட்டுகின்றன. 1975ம் ஆண்டு தொடங்கி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் இத்தொடரில், ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா தலா 2 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன. பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா ஒரு முறை வெற்றியை ருசித்துள்ள நிலையில், கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து ஒரு முறை கூட உலக கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கும் இந்த வாய்ப்பு இதுவரை கைகூடவில்லை.
 
கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ம் ஆண்டில் முதல் முறையாக உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதன் பிறகு எம்.எஸ்.டோனி தலைமையில் 2011ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த தொடரில் இந்தியா உலக கோப்பையை 2வது முறையாக வசப்படுத்தியது. இந்த நிலையில், விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 3வது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் உலக சாம்பியனாகத் துடிக்கிறது. அந்த அணி கடைசியாக விளையாடிய 10 இருதரப்பு தொடர்களில் ஒரு டிரா, 9 வெற்றி கண்டுள்ளதால் மிகுந்த உற்சாகத்துடன் களம் காண்கிறது. அதே சமயம், கடந்த ஓராண்டாக சற்று தடுமாறினாலும், ஆஸ்திரேலிய அணி தற்போது முழு பலத்துடன் கோப்பையை தக்கவைத்துக் கொள்ளும் உறுதியுடன் உள்ளது. பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஸ்மித், வார்னர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதும் பலத்தை அதிகரித்துள்ளது. பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தானை வீழ்த்தியதும் ஆஸி. அணி வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.
டு பிளெஸ்ஸி தலைமையிலான தென் ஆப்ரிக்கா, வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகளையும் அலட்சியப்படுத்துவதற்கில்லை.
 
கிறிஸ் கேல், ஷாய் ஹோப், ஹெட்மயர், ரஸ்ஸல் என்று அதிரடி வீரர்கள் அணிவகுக்கும் வெஸ்ட் இண்டீசை சமாளிப்பதும் மிகப் பெரிய சவாலாகவே இருக்கும். இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் அதிர்ச்சி தோல்விகளை பரிசளிக்க காத்திருக்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் விளையாட உள்ளன. இந்த சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். ஜூலை 9 மற்றும் 11ம் தேதி அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டி, ஜூலை 14ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஜூன் 5ம் தேதி தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது. ஜூன் 16ம் தேதி மான்செஸ்டரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் 46 நாட்களில் 48 போட்டிகள் நடைபெற உள்ளன. அனைத்து அணிகளுமே பலம் வாய்ந்தவையாக உள்ளதால், ஒவ்வொரு ஆட்டமுமே கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Tags : teams ,LONDON , In London, 10 teams, the test
× RELATED லக்னோ-சென்னை மோதலில் யாருக்கு ஹாட்ரிக் வெற்றி, தோல்வி