×

தாராபுரம் அருகே ஒரு குடம் ரூ.7க்கு விற்பனை 3 மாதமாக குடிநீர் கிடைக்காத கிராமங்கள்

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது தொப்பம்பட்டி ஊராட்சி. இங்குள்ள வெங்கிட்டிபாளையம், மடத்துப்பாளையம் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூத்தி செய்யும் வகையில் அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. இதற்கிடையே கோடை காலம் துவங்கியதால் இப்பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், ஏராளமானோர் தாராபுரம் சப்-கலெக்டர் ஆபீசை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு சப்-கலெக்டர் பவன்குமாரிடம் மனு அளித்தனர்.

அதில், ‘தொப்பம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட 10க்கும் அதிகமான கிராமங்களுக்கு சுண்ணாம்புகாடு கூட்டு குடிநீர்‌ திட்டம்‌ மூலமாக அமராவதி ஆற்று குடிநீர்‌ விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது கடந்த 3 மாதத்திற்கும் மேலாக இப்பகுதியில் குடிநீர்‌ விநியோகம்‌ செய்யப்படவில்லை. அமராவதி ஆற்றில்‌ புதிதாக தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைத்து குடிநீர்‌ விநியோகிக்க கோரி ஊர்‌ பொது மக்கள்‌ சார்பாக கடந்த 1ம்‌ தேதி அனைத்து வீடுகளிலும்‌ கருப்பு கொடி கட்டி போராட்டம்‌ நடத்தப்பட்டது.

இதை தொடர்ந்து, உடனடியாக கலெக்டர் நிதியிலிருந்து அமராவதி ஆற்றில்‌ தரைமட்ட நீர்‌ தேக்க தொட்டி மற்றும்‌ ஆழ்துளை கிணறு அமைத்து 2 மாதத்திற்குள்‌ பணிகள்‌ முடிக்கப்பட்டு முறையாக குடிநீர்‌ வழங்கப்படும்‌ என அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால்‌, இதுவரை பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கவில்லை. கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக ஒரு குடம் தண்ணீர் ரூ.7 கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு நிர்வாகம் உடனடியாக குடிநீர்‌ தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். தவறினால் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Villages ,Dharapuram , Dharapuram, a pitcher, sold for Rs 7, drinking water for 3 months, villages not available
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை