×

குறுவை சாகுபடிக்கு ஏங்கும் விவசாயிகள் காவிரி பாயும் 11 மாவட்டங்களில் நீர்நிலைகள் வறண்டன

தஞ்சை:  காவிரி பாயும் 11 மாவட்டங்களில் ஆறு, ஏரி, குளங்கள் வறண்டதால், குறுவைக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டதே என விவசாயிகள் ஏங்குகின்றனர். காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். கடும் வறட்சி, போதிய மழையின்மை, காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்காமை போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த 7 வருடங்களாக வழக்கமான காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படுவதில்லை.

கடந்த ஆண்டு ஒரு மாதம் தாமதமாக ஜூலை 19ம் தேதி அணை திறக்கப்பட்டது. கடைசியாக கடந்த 2011 ஜூன் 12ல் வழக்கமான நேரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக ஜூன் 12 ஆம் தேதி அணை திறக்கப்படவில்லை. நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 51 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அணையின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 60 அடியாக இருந்தால் மட்டுமே அணையை பாசனத்துக்கு திறக்க முடியும் ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மேட்டூர் அணை டெல்டா பாசனத்திற்கு திறப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. ஏனென்றால் தென் மேற்கு பருவ மழை ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு பிறகு தான் கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இம்மழை பெருமழையாக பெய்து கர்நாடக மாநிலத்திலுள்ள கேஆர்எஸ் கபினி ஆகிய அணைகள் முழுமையாக நிரம்பினால் மட்டுமே மேட்டூருக்கு உபரி நீர் கிடைக்கும். கடந்த காலங்களில் உபரி நீர் வந்த பின்பே மேட்டூர் அணை தண்ணீர் பெறமுடிந்தது. அதேபோல் தற்போது உபரி நீரையே நம்பி இருக்க வேண்டிய அவல நிலைக்கு டெல்டா விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

காவிரி ஆணைய கூட்டத்திலும் உருப்படியான எந்த முடிவும் எட்டப்படாதது தமிழக விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. எனவே காவிரி ஆணையத்தின் மூலம் உடனடியாக தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற்றால் மட்டுமே ஜூன் 12ஆம் தேதி அணையை திறப்பதற்கான வழி ஏற்படும். ஆனால் அதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லை என்பதே தற்போதைய உண்மையாகும்.

இச்சூழ்நிலையில் காவிரி டெல்டாவில் 700க் கும் மேற்பட்ட ஏரி குளங்கள் மற்றும் தடுப்பணைகள், காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் போன்ற பெரிய ஆறுகளும் ஏ மற்றும் பி வாய்க்கால்களும் கிளை ஆறுகளும் ஒரு சொட்டு நீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. மேலும் டெல்டாவில் கடுமையான வெயில் வாட்டி வருவதால் கடும் வறட்சியில் மக்கள் வாடுகின்றனர்.


Tags : districts ,watershed ,Cauvery , The cultivation of the crops, farmers,cauvery, 11 districts, watershed, dry
× RELATED வங்கக் கடலில் காற்றழுத்தம் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழை