×

ராகுல்காந்தி பதவியில் தொடர வலியுறுத்தி அமைதி பேரணி காங்கிரஸ் நிர்வாகிகள் இருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு: கட்சியின் தலைமை பதவியை தொடர தீர்மானம்

சென்னை: ராகுல்காந்தி தலைவர் பதவியில் இருந்து விலக கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் நிர்வாகிகள் இருவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கட்சி தலைவர் பதவியில் தொடர வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக முடிவெடுத்த ராகுல்காந்தி, அதற்கான ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அவரது ராஜினாமா முடிவை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது. எனினும் ராகுல்காந்தி தனது முடிவில் பிடிவாதமாக இருக்கிறார்.

இந்நிலையில் ராகுல்காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யக் கூடாது. தொடர்ந்து அவர் அப்பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் சார்பில் அமைதி பேரணி சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி, தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகம் முன்பு தொடங்கி காமராஜர் அரங்கத்தில் முடிவடைந்தது.

பேரணியின் போது, ராகுல் தலைமை தொடர வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். பேரணி காமராஜர் அரங்கத்தில் முடிவடைந்ததும், அங்குள்ள காமராஜர் சிலை முன்பு அவசரக் கூட்டம் கூடியது. கூட்டத்துக்கு, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். தமிழக மேலிட பொறுப்பாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குமரிஅனந்தன், கிருஷ்ணசாமி, தங்கபாலு, ஈவிகேஎஸ்.இளங்கோவன், காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், எச்.வசந்தகுமார், கார்த்திக் சிதம்பரம், செல்லக்குமார், ஜெயகுமார், செயல் தலைவர்கள் மோகன் குமாரமங்கலம், பொருளாளர் நாசே ராமச்சந்திரன், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், ரூபி மனோகரன், முன்னாள் எம்பிக்கள் விஸ்வநாதன், ராணி, சிரஞ்சீவி, அஸ்லாம் பாட்ஷா, எஸ்.கே.நவாஸ், ஆலங்குளம் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் வடசென்னை மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட துணை தலைவர் ராஜன், செயலாளர் ரியாஸ் ஆகியோர் திடீரென தங்கள் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்து அங்கு கூடியிருந்த காங்கிரசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிப்பு முயற்சியை தடுத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அணிந்திருந்த ஆடையை அகற்றி தண்ணீரை ஊற்றினர்.

அவர்கள் இருவரும் ராகுல்காந்தி பதவி விலகக் கூடாது என்று கோஷமிட்டனர். உடனடியாக அவர்களை போலீசார் அங்கிருந்து அகற்றினர். இதை தொடர்ந்து மீண்டும் அங்கு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பேசிய தலைவர்கள், ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், அவர் பதவியை ராஜினாமா செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி பேசினர்.

அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி பேசினார். அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு ராகுல்காந்தி பொறுப்பேற்று தலைமை பொறுப்பிலிருந்து விலகப் போவதாக செய்திகள் வந்துள்ளது. இது லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் தோல்விக்கு ராகுல்காந்தி பொறுப்பேற்பதை காங்கிரஸ் கட்சியினர் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவர் பதவி விலகுவதை எவரும் அனுமதிக்க மாட்டார்கள்.

ராகுல்காந்தி உழைப்பிற்கு ஈடாக நாமெல்லாம் இன்னும் கூடுதலாக உழைத்திருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிற தோல்வியை நிச்சயம் தடுத்திருக்க முடியும். காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக நாம் எத்தகைய உழைப்பை செலுத்தினோம் என்பதை மனசாட்சியோடு ஆய்வு செய்ய வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு தலைவர் ராகுல்காந்தி அவர்கள் எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டார் என்பதை இக்கூட்டம் உறுதியாக கூற விரும்புகிறது.

தற்போது ஏற்பட்டிருக்கிற தோல்வி தற்காலிக சறுக்கலே தவிர, வீழ்ச்சியல்ல. இதிலிருந்து காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்கிற துடிப்பும், வல்லமையும் தலைவர் ராகுல்காந்திக்கு இருக்கிறது. எனவே, காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிற தோல்விக்கு தலைவர் ராகுல்காந்தி காரணம் என எவ்வகையிலும் கூற முடியாது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சோதனையான நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையை தொடர்ந்து ஏற்று அவர் வழிநடத்திட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லி தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Tags : Rahul Gandhi ,rush , Rahul Gandhi's post, emphasizing continuing, peace march, congressional executives, tabloid
× RELATED சொல்லிட்டாங்க…