×

வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு புகார் டி.ஜி.பி. ஜாபர்சேட்டுக்கு எதிரான வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசிடம் விருப்ப ஒதுக்கீட்டின் கீழ் வீட்டு மனை வாங்கியதாக எழுந்த புகாரில், டி.ஜி.பி., ஜாபர்சேட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உளவுத்துறை ஐ.ஜி.யாக பணியாற்றியவர் எம்.எஸ்.ஜாபர்சேட். தற்போது சி.பி.சி.ஐ.டி., டி.ஜி.பி.யாக பதவி வகித்து வருகிறார்.

இவரது மனைவி உள்பட பலருக்கு கடந்த  2009-ம் ஆண்டு திருவான்மியூரில் அரசு விருப்ப ஒதுக்கீட்டின் கீழ் வீட்டு மனை ஒதுக்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ஜாபர்சேட் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் முறைகேடு, கூட்டுச்சதி, ஊழல் தடுப்பு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

ஜாபர்சேட் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய மத்திய அரசிடம் முறையான அனுமதியை தமிழக அரசு பெறவேண்டும். ஆனால், அந்த அனுமதியை பெறாமலேயே சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அதில், ஜாபர்சேட் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதிக்கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பம் செய்துள்ளோம். அந்த அனுமதி கிடைத்ததும், அதை முறையாக கோர்ட்டில் தாக்கல் செய்வோம் என்று போலீசார் உத்தரவாதம் அளித்திருந்தனர். இதை ஏற்றுக் கொண்ட சிறப்பு கோர்ட்டு அந்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்றது.

ஆனால், ஜாபர்சேட் மீது வழக்கு பதிவு செய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்க மறுத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவு நகலை விசாரணை கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாபர்சேட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், ‘தமிழக டி.ஜி.பி.யாக இருப்பவர் வருகிற ஜூன் மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். சட்டம்ஒழுங்கு டி.ஜி.பி. பதவிக்கு என்னுடைய பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. என் மீது வழக்குப்பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்து உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு நகலை சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தும், இதுவரை நீதிபதி எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். எனவே, எனக்கு எதிராக சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி பி.ராஜமாணிக்கம் விசாரித்தார்.

பின்னர், ‘ஜாபர்சேட்டுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கினால் மட்டுமே, குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க வேண்டும். ஆனால், அனுமதியில்லாமலேயே தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரியை கீழ் கோர்ட்டு ஏற்றுக் கொண்டுள்ளது.

எனவே, அந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யவில்லை என்றால், நீதிமன்ற விசாரணையை தவறாக பயன்படுத்துவதற்கு சமமாகி விடும். அதனால், ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாபர்சேட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை ரத்து செய்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

ஜாபர்சேட் மீது, இந்த ஒரு வழக்கு மட்டும் இருந்தது. இதனால் அவருக்கு டிஜிபி பதவி வழங்க பரிசீலனை செய்யும்போது, இது எழுப்பப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் தற்போது அந்த ஒரு குற்றச்சாட்டும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் அவர் இனி சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி வழங்குவதற்கு முழு தகுதி பெறுகிறார். சட்டம் ஒழுங்கு டிஜிபி வழங்குவதற்கான பட்டியலில் தகுதியானவர்களில் அவர்தான் முதலில் உள்ளார்.

இதனால் அவருக்கு அந்த பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி வழங்குவதற்கு ஜாபர்சேட் முழு தகுதி பெறுகிறார். சட்டம் ஒழுங்கு டிஜிபி வழங்குவதற்கான பட்டியலில் தகுதியானவர்களின் அவர்தான் முதலில் உள்ளார். இதனால் அவருக்கு அந்த பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : DGP ,High Court ,Zafar Said , Housing allocation, complaint complaint, DGP Zafarzade, case against, cancellation, high court
× RELATED பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல்...