×

பிரதமராக இன்று மோடி பதவியேற்கும் நிலையில் தமிழகத்துக்கு 2 அமைச்சர் பதவி? வைத்திலிங்கம் அமைச்சராக வாய்ப்பு

சென்னை: மோடி இன்று மாலை 2வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். புதிய அமைச்சர்களும் அப்போது பதவியேற்பார்கள். அப்போது தமிழகத்துக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்க பிரதமர் திட்டமிட்டுள்ளதாகவும், பாஜவுக்கு ஒரு அமைச்சர் பதவியும், அதிமுகவைச் சேர்ந்த வைத்திலிங்கத்துக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜ, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து 38 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் பாஜ 5 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனுமான ரவீந்திரநாத் குமார் தவிர 37 வேட்பாளர்களும் படுதோல்வி அடைந்தனர். இதனால் பாஜ மேலிட தலைவர்கள் அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில், டெல்லியில் கடந்த 25ம் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டமும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டமும் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றிபெறாவிட்டாலும், அதிமுக - பாஜ நட்பை தொடர்ந்து உறுதி செய்யும் வகையில் தனது மகன் ரவீந்திரநாத் குமார் அல்லது வைத்திலிங்கத்துக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் பாஜ மேலிட தலைவர்களிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அதேநேரம், ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால், அதிமுகவில் உள்ள மூத்த எம்பிக்கள் போர்க்கொடி தூக்குவார்கள். அதனால், மாநிலங்களவை எம்பியாக உள்ள வைத்தியலிங்கத்துக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று மூத்த தலைவர்களும் கட்சியில் வலியுறுத்தி வந்தனர்.

அதேநேரம், தமிழக பாஜ சார்பில் டெல்லி மேலிடத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சியில் தற்போது மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்கள் யாரும் இல்லை. அதனால்தான் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர்கள் 5 பேரும் தோல்வி அடைந்து விட்டனர். தமிழகத்தில் அதிமுகவால் இனி பாஜவுக்கு எந்த பயனும் இல்லை. பாஜவின் தயவால்தான் அதிமுக ஆட்சியே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால், அதிமுகவில் யாருக்கும் அமைச்சர் பதவி வழங்க கூடாது என்று கூறி உள்ளனர்.

அதேநேரம், தமிழகத்தில் அடுத்த மாதம் மாநிலங்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதில் 3 எம்பிக்களில் அதிமுக எளிதில் வெற்றிபெற வாய்ப்புள்ளது. அதனால், அதிமுக சார்பில் பாஜவை சேர்ந்த ஒருவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மோடி தலைமையிலான அமைச்சரவையில் இன்று பதவி வழங்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக பாஜ மூத்த தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி மோடி மற்றும் அமித்ஷா  சார்பில் முதல்வர் எடப்பாடியிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு எடப்பாடி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு ராஜ்யசபா எம்பியாகிறவருக்கு மத்திய அமைச்சர் பதவி தற்போது வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. பதவி ஏற்ற பிறகு அடுத்த மாதம் ராஜ்யசபா தேர்தலில் அவர் எம்பியாவார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்துக்கு இணை அமைச்சர் பதவி வழங்க மோடி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் நேற்று மாலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரும் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து வைத்தியலிங்கம், தங்கமணி, வேலுமணி ஆகியோர் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

இதனால் பிரதமர் அலுவலகத்தின் அழைப்பின் பேரில் அவர் டெல்லி சென்றிருப்பதாகவும், அவர் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆகியோர் டெல்லி செல்கின்றனர். அடுத்த மாதம் மாநிலங்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதில் 3 எம்பிக்களில் அதிமுக எளிதில் வெற்றிபெற வாய்ப்புள்ளது. அதனால், அதிமுக சார்பில் பாஜவை சேர்ந்த ஒருவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : nominee ,minister , Prime Minister, Modi today, takes office, 2 Minister for Tamilnadu
× RELATED கேள்வி கேட்டால் ரெய்டா?: தமிழகத்திற்கு...