கொடைக்கானலில் கோடைவிழா: மலர் கண்காட்சியுடன் நாளை துவங்குகிறது

கொடைக்கானல்: கொடைக்கானலில் நாளை மலர் கண்காட்சியுடன் கோடை விழா துவங்கவுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.‘மலைகளின் இளவரசியான’ கொடைக்கானலில் ஆண்டுதோறும் கோடைவிழா, மலர் கண்காட்சி சிறப்பாக நடத்தப்படும். இந்த ஆண்டு கோடை விழா நாளை (மே 30) துவங்கி ஜூன் 8ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் ஒரு அம்சமாக பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நாளை முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறும்.
பொதுவாக 2 நாட்கள் மட்டுமே மலர் கண்காட்சி நடத்தப்படும். முதல் முறையாக இந்தாண்டு 3 நாட்கள் நடத்த திட்டமிட்டு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மலர் கண்காட்சிக்காக பிரையண்ட் பூங்காவில் காட்சி அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த அரங்குகளில்தான் பல லட்சம் வண்ண மலர்கள் காட்சிக்கு வைக்கப்படும்.

மேலும், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் காட்சி அரங்குகள் அமைக்கப்படும். சுற்றுலாப் பயணிகளை கவர செயற்கை நடன நீரூற்று செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மலர் கண்காட்சி நிறைவடைந்ததும் பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என ஜூன் 8ம் தேதி வரை கோடைவிழா களை கட்ட உள்ளது. மலர் கண்காட்சி, கோடைவிழாவையொட்டி சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலில் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்து தர வேண்டும் என கொடைக்கானல் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


× RELATED வார விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்