×

பறிபோகும் இயற்கை வளங்கள் குன்றத்தூரில் மலையை ஆக்கிரமித்து வீடுகள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

குன்றத்தூர்: குன்றத்தூர் முருகன் கோயில் மலைப்பகுதியில் நத்தம் மலைக் குன்றானது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகளாக மாறி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குன்றத்தூரில் உள்ள புகழ் பெற்ற முருகன் கோயிலானது சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நத்தம், மலைக்குன்றின் மீது அமைந்துள்ள இந்த கோயிலுக்கு, சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவதுண்டு. இந்த கோயிலை சுற்றிலும் அமைந்துள்ள மலைப்பாங்கான இடங்கள் அனைத்தும் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு காலத்தில் மரங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சி தந்த இந்த நத்தம் மலை பகுதியானது, தற்போது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, பொலிவிழந்து வருகிறது.

முன்பெல்லாம் குடியிருப்பதற்காக மட்டுமே இயற்கை வளங்களை அழித்து வீடுகளை கட்டி வந்த தனி நபர்கள் சிலர், தற்போது அரசுக்கு சொந்தமான, மலை, ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பு செய்து, அதனை பிளாட்டுகளாக பிரித்து, மனை 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை, விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்று அரசு நிலத்திற்கு மின் இணைப்பு வழங்க கூடாது என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது. இருந்த போதிலும், மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல், மனை ஒன்றிற்கு ரூ.40,000 வரை லஞ்சமாக பெற்று கொண்டு சட்ட விரோதமாக மின் இணைப்பு வழங்குகின்றனர். அதே போல், பேரூராட்சி அதிகாரிகளும் தங்கள் பங்கிற்கு, ஒரு பெரும் தொகையை லஞ்சமாக பெற்று கொண்டு, புறம்போக்கு இடங்களுக்கு குடிநீர் வசதி, சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கின்றனர்.

இதே நிலை தொடர்ந்தால், ஒரு கட்டத்தில் தமிழகத்தில் இயற்கை வளங்களே இல்லாத சூழல் ஏற்படும். தற்போது அதிகளவில் மரங்களை அழித்ததாலும், அரசாங்கம் இயற்கை வளங்களை பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்காததாலும், புவி வெப்பமயமாதல் நாளுக்கு நாள் அதிகரித்து, கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு, மக்கள் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் விரைவில் தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு, விரைவில் தேசமே பாலைவனமாக மாறும் சூழ்நிலை ஏற்படும். எனவே வருவாய் துறை, வனத்துறை அதிகாரிகள், அரசு புறம்போக்கு நிலங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து, விற்பனை செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குன்றத்தூர் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Tags : Kundrathur , Natural resources, Kundrathur, occupy homes and officials
× RELATED குன்றத்தூர் பிரதான சாலையோரத்தில்...