×

மக்களவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து அமித்ஷா, கனிமொழி மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்

டெல்லி: மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து அமித்ஷா, ஷங்கர் பிரசாத், கனிமொழி ஆகியோர் தங்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர். நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தலில் குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா போட்டியிட்டு 3 லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல, மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதியிலும், திமுகவைச் சேர்ந்த கனிமொழி தமிழகத்தின் தூத்துக்குடி தொகுதியிலும் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றனர். இவர்கள் மூவரும் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக (எம்.பி) பதவி வகித்தனர்.

தற்போது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி மற்றும் டி.ராஜா பதவிக்காலம் ஜூன் மாத இறுதியில் முடிவடைய உள்ள நிலையில் தற்போது கனிமொழி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனவே நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் திமுக மூன்று இடங்களில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இடம் பெற்றால் அவருக்கு பதில் யார் பாஜக தலைவராகக்கூடும் என்பது தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, ஜேபி நட்டா அல்லது தர்மேந்திர பிராதன் ஆகியோரில் ஒருவர் பாஜக தலைவர் பொறுப்புக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, அமேதி தொகுதியில் வெற்றி பெற்ற மத்திய அமைச்சர்  ஸ்மிருதி இரானியும் தனது எம்.பி பதவியை ஓரிரு நாளில் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மிருதி இரானி குஜராத் மாநிலத்தில் எம்.பி-யாக பதவி வகித்து வருகிறார். இவர் மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Amit Shah ,Lok Sabha ,Kanimozhi Rajya Sabha , Amit Shah, Kanimozhi, Member of the Rajya Sabha, resigned
× RELATED மக்களவை தேர்தல்: கர்நாடக பாஜக-வில் வலுக்கும் உட்கட்சிப் பூசல்