×

உடல்நிலை காரணமாக மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டாம், ஓய்வெடுக்க விரும்புகிறேன்: மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம்

டெல்லி: உடல்நிலை காரணமாக மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டாம், உடல்நிலையை கருத்தில் கொண்டு ஓய்வெடுக்க விரும்புவதாக மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற மக்களவைத்  தேர்தலில் பாஜ  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. தொடர்ந்து 2-வது முறையாக நரேந்திர மோடி மீண்டும் நாளை பிரதமராக பதவியேற்கிறார்.  இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான 16-வது மத்திய அமைச்சரவையில் பாஜக மூத்த தலைவர் அருண்ஜெட்லி மத்திய நிதியமைச்சராக பணியாற்றினார். ஆனால் கடந்த 18 மாதங்களாக உடல்நலக்குறைவால் பெரிதும் பாதிக்கப்பட்டு  வந்தார். இதனால் கடைசியாக இடைக்கால பட்ஜெட்டை, நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்ய்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அருண் ஜெட்லி, கடந்த 23-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதனால் பாஜகவின் வெற்றிக் கொண்டாட்டத்தில்  அவரால் பங்குபெற முடியவில்லை. இதனையடுத்து அவருக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தகவல் பரவியது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நலமாக உள்ளார் என்றும், அவரது உடல்நிலை குறித்து வெளியான  தகவல் உண்மைக்கு புறம்பானது என மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் சிதான்ஷூ கர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரதமராக நாளை பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு அருண்ஜெட்லி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 18 மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ள உடல்நிலையை காரணம் காட்டி, மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டாம்,  உடல்நிலையை கருத்தில் கொண்டு ஓய்வெடுக்க விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், அரசுக்கும், கட்சிக்கும் வெளியில் இருந்து அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்றும் பிரதமர் மோடியிடம் ஏற்கெனவே வாய்மொழியாக  இதனை தெரிவித்திருந்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். 


Tags : Arun Jaitley ,Narendra Modi , Union Cabinet, Modi, Arun Jaitley, Letter
× RELATED அருண் ஜெட்லி அரங்கம் தயார்: டெல்லி – ஐதராபாத் இன்று பலப்பரீட்சை