×

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு : இடைத்தரகர், உதவி செவிலியருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

நாமக்கல் : ராசிபுரம் குழந்தைக விற்பனை வழக்கில் இடைத்தரகர் லீலா, உதவி செவிலியர் சாந்தி ஆகியோரின் ஜாமீன் மனுவை நாமக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் நர்ஸ் அமுதவள்ளி, கணவர் ரவிச்சந்திரன், அரசு  மருத்துவமனை டிரைவர் முருகேசன், புரோக்கர்கள் அருள்சாமி, பெங்களூருவை சேர்ந்த அழகுகலை நிபுணர் ரேகா உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் 7 பேர் நீதிமன்றங்களில் ஜாமீன் கேட்டு, தாக்கல் செய்த மனு  தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில், இவ்வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நர்ஸ் அமுதவள்ளியின் தம்பி நந்தகுமார்(42), கடந்த 16ம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையிலான விசாரணை குழுவினர், நந்தகுமாரை கடந்த 5 நாட்களாக சேலத்தில் வைத்து விசாரித்தனர். பின்னர் நந்தகுமாரை நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் வடிவேல் முன்னிலையில் அவரது வீட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து வரும் 6ம் தேதி வரை நந்தகுமாரை சிறையில்  அடைக்கும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.

ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

இந்நிலையில் ஜாமீன் வழங்கக் கோரி இடைத் தரகர் லீலா 4வது முறையாகவும் உதவி செவிலியர் சாந்தி 2வது முறையாகவும் நாமக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இருவரின் மனுக்களையும் விசாரித்த நீதிபதி இளவழகன், ஜாமீன் வழங்க மறுத்ததோடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இவ்விருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டால் இவ்வழக்கின் விசாரணை பாதிக்கப்படும் என்பதால் ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Rasipuram ,Court ,assistant nurses , Rasipuram, child, sale, case, Namakkal court, bail petition, dismissal
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து