×

கஜா புயலில் சிக்கி மரங்கள் கடும் பாதிப்பால் அரிமளம், திருமயத்தில் மாம்பழம் வரத்து குறைவு

திருமயம்: தமிழகத்தில் மாம்பழ சீசன் தொடங்கிய நிலையில் அரிமளம், திருமயம் பகுதியில் வரத்துகள் இல்லாததால் மாம்பழத்திற்கு கடும் கிராக்கி நிலவி வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மா மரங்கள் பூத்து காய்த்து பழுக்க தொங்கும். இக்காலங்களில் பெரும்பாலான கடைகள், சாலையோர கடைகளில் ஆங்காங்கே விற்பனைக்காக மாம்பழங்கள் குவிக்கப்பட்டிருப்பதை காண முடியும். அதே சமயம் குளிர் பிரதேசங்களில் விளையும் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களின் விலைச்சல் குறைவாக இருப்பதால் இதன் விலை வின்னை முட்டும் அளவிற்கு இருப்பது கோடை காலத்தில் வழக்கமான ஒன்று. ஆனால் கோடை காலத்தில் மட்டும் விளையும் மாம்பழம் விலை குறைவாக இருப்பதால் பழ பிரியர்கள் மாம்பழத்தை வாங்கி கோடை காலத்தை கழித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்தாண்டு தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் வீசிய கஜா புயலால் அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள பெரும்பாலான மாம்மரங்கள் வேரோடு சாய்ந்தும், கிளைகள் முறிந்த நிலையிலும் காணப்படுகிறது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக புயலில் இருந்து தப்பித்த மரங்கள், கிளைகள் முறிந்த மா மரங்கள் புயலால் அதிர்ச்சியடைந்தது போல பூ பூத்து காய்க்காமல் பொய்து போனது. அதேபோல் பூ பூத்த ஒரு சில மா மரங்களும் கடும் வறட்சி, கோடை வெப்பம் காரணமாக பூவிலேயே கருகி கொட்டிவிட்டதாக அரிமளம், திருமயம் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் அரிமளம், திருமயம் பகுதிகளுக்கு மாம்பழ வரத்து சீசனிலும் குறைந்து காணப்படுவதோடு, ஒரு கிலோ மாம்பழம் ரூ.100 முதல் 150 வரை விற்கப்படுவதால் மாம்பழ பிரியர்கள் மாம்பழம் வாங்குவதை தவிர்த்து வருகின்றனர்.

கோயில் திருவிழாக்களில் கூட மாம்பழத்தை பார்க்க முடியவில்லை. சித்திர, வைகாசி மாதங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அம்மன் கோயில்களில் திருவிழா நடத்துவது வழக்கம். இதுபோன்ற விழாக்காலங்களில் மாம்பழ கடைகள் அதிகளவு இருப்பதோடு விலை குறைவாகவும் காணப்படும். இதனால் விழாவுக்கு வரும் பக்தர்கள் ஆர்வத்துடன் மாம்பழங்களை வாங்கி செல்வது வழக்கம். ஆனால் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் வறட்சியின் பிடியில் சிக்கி தவிப்பதால் மா மரங்களை கூட காப்பாற்ற நீரில்லாத நிலையில் மாம்பழ உற்பத்தி செய்வது மிகவும் கடினம். இதனால் திருவிழாக்களில் மாம்பழ விற்பனை செய்ய ஒருசில கடைகள் மட்டுமே வருகிறது. அந்த கடைகளிலும் மாம்பழங்கள் குறைவாகவும், விலை அதிகமாகவும் உள்ளதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.

வரத்து குறைய குரங்குகளும் காரணம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மக்கள் வீட்டருகே பெரும்பாலும் கொய்யா, வாழை, பலா, மா உள்ளிட்ட பழம் தரும் மரங்களை வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கஜா புயல் தாக்குதலில் இருந்து தப்பித்த மரங்கள் காய் காய்த்தாலும் அதனை குரங்குகள் கூட்டமாக வந்து சிறு பிஞ்சிலேயே அழித்துவிடுவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் நகரம், கிராமம் என பாகுபாடின்றி அனைத்து பகுதிகளிலும் குரங்குகள் கூட்டம் கூட்டமாக வலம் வருவதால் குரங்குகளிடம் இருந்து பழம் தரும் மரங்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். குரங்குகளை கட்டுப்படுத்த புதுக்கோட்டை மாவட்ட கிராம வாசிகள் பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : mangalam ,Thirumayam , Tirumayam, kaja storm, mango
× RELATED மாவட்ட பேச்சு போட்டியில் அரசு பள்ளி மாணவர் முதலிடம்