×

வெளிநாடு செல்ல அனுமதி கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனு: எம்.பி.யாக தேர்ந்தெடுத்த தொகுதியில் கவனம் செலுத்துமாறு நீதிபதி அறிவுரை

புதுடெல்லி: எம்.பியாக தேர்ந்தெடுத்து மக்களவை அனுப்பிய தொகுதியில் முழுக்கவனம் செலுத்துமாறு கார்த்தி சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா, ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வரும் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் இந்த மாத இறுதி மற்றும் அடுத்த மாத தொடக்கத்தில் லண்டன், அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளார். இது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், 10 கோடி ரூபாயை வைப்பு தொகையாக செலுத்திவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்ற ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார். ஏற்கனவே பல்வேறு நிபந்தனைகளுடன் வெளிநாடு செல்ல கார்த்திக் சிதம்பரத்திற்கு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் செலுத்திய பிணைத்தொகை ரூ.10 கோடியை உடனடியாக திருப்பி தரகோரியும், அந்த தொகையை மீண்டும் நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு வெளிநாடு தான் செல்வேன் என்ற புதிய மனு ஒன்றை கார்த்திக் சிதம்பரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். முன்னதாக இந்த மனு சிறப்பு விசாரணைக்கு

வந்த போது அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது, ஏற்கனவே இந்த கோரிக்கையை முழுமையாக நிராகரித்து விட்டேன். இதனால் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. வேண்டுமானால், உடனடியாக ரூ.10 கோடியை வைப்புத்தொகையாக செலுத்திவிட்டு வெளிநாடுகளுக்கு செல்லலாம் என்றும் மீண்டும் இது போன்ற மனுக்களை தாக்கல் செய்யவேண்டாம் எனவும் கூறினார். மேலும் உங்களை தேர்ந்தெடுத்த தொகுதியில் முழுமையாக கவனம் செலுத்துங்கள் என்று கார்த்திக் சிதம்பரத்திற்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து கார்த்திக் சிதம்பரத்தின் மனுவை தலைமை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Tags : Karthi Chidambaram ,Judge ,constituency , Karthik Chidambaram, INX Media Case, Supreme Court
× RELATED ராமர் கோயிலின் ₹8 ஆயிரம் கோடிக்கு வரி...