×

கொடைக்கானல் பூம்பாறையில் இரண்டாவது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ

கொடைக்கானல்: கொடைக்கானல் பூம்பாறை வனப்பகுதியில் ஏற்பட்ட இரண்டாவது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீயால் ஏராளமான மரங்கள், புல்வெளிகள் கருகி போயின. கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கடும் வெயிலின் காரணமாக தொடர்ச்சியாக காட்டுத்தீ ஏற்பட்டு வந்தது. இதில் சுமார் 100 மரங்கள், பல ஏக்கர் புல்வெளிகள் கருகி போயின. தற்போது பகலில் வெயில் நிலவி வந்தாலும் மாலை நேரத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் காட்டுத்தீ தாக்கம் குறைந்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கொடைக்கானல் மேல்மலைக்கு செல்லும் சாலையில் பூம்பாறை அருகே உள்ள வனப்பகுதியில் திடீரென பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் ஏராளமான மரங்கள் கருகி மின்வயர்கள் மீது விழுந்ததால் அவையும் எரிந்து போயின. இதனால் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, கவுஞ்சி போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனர். தீயில் சிக்கி 3 மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன என்றும், இரவில் இதை சீரமைக்க முடியாது, காலை சீரமைப்பு பணிகள் துவங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி நேற்று காலையில் பணிகள் துவங்கப்பட்டு மாலை 4.30 மணியளவில் மேல்மலை கிராமங்களுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டது. இதற்கிடையே நேற்றும் இரண்டாவது நாளாக பூம்பாறை அருகேயுள்ள வனப்பகுதிகளில் காட்டுத்தீ எரிந்தது. இதில் ஏராளமான மரங்கள், புல்வெளிகள் கருகி போயின. ஒரு சில இடங்களில் தீ கட்டுப்படுத்தப்பட்டாலும் மற்ற இடங்களில் தொடர்ந்து எரிவதால் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.

Tags : Kodaikanal Poompara , Kodaikanal, Wildfire
× RELATED கொடைக்கானல்-பூம்பாறை இடையே...