×

முத்துப்பேட்டை மேலநம்மங்குறிச்சியில் பாலத்தில் தடுப்பு இல்லாததால் பொதுமக்கள் திக்... திக்... பயணம்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அருகே இரும்பு பாலத்தில் தடுப்பு இல்லாததால் பொதுமக்கள் திக்..திக்.. பயணம் மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சியில் பாமணி ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் தம்பிக்கோட்டை வாய்க்கால் என்பது ஒரு ஆறுபோன்று பரந்துவிரிந்து காணப்படும் வாய்க்காலாகும் அதன் குறுக்கே பழமையான இரும்பு பாலம் ஒன்று உள்ளது. கீழ மேலநம்மங்குறிச்சி - மேலநம்மங்குறிச்சி கிராமத்தை இணைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த பாலத்தின் வழியாகத்தான் மேற்கண்ட பகுதி மக்கள் பள்ளி மாணவர்கள் முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் பாலத்தின் தடுப்பு கம்பிகள் பல ஆண்டுகளுக்கு முன் பெயர்ந்து சேதமாகி விட்டது இதனால் தடுப்பு இல்லாமல் இருப்பதால் இதில் இப்பகுதி மக்கள் ஆபத்தான நிலையில் பயணித்து வருகின்றனர். சில நேரத்தில் மக்கள் தவறி விழுந்து பாதிக்கப்படுவதும் அதேபோல் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துகள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இதில் வாய்க்காலில் தண்ணீர் செல்லும்போது இப்பகுதி மக்கள் ஒரு ஆபத்தான பயணத்தை இதில் தொடர்கின்றனர்.

அதனால் இந்த இரும்பு பாலத்தில் தடுப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நடவடிக்கை ஏதுமில்லை. இதனால் இப்பகுதி மக்கள் தினந்தோறும் திக்..திக்.. பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இதனால் இனியும் காலதாமதப்படுத்தாமல் இந்த பாலத்தை சீரமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் கூறுகையில்: முத்துப்பேட்டை ஓன்றியம் மேலநம்மங்குறிச்சி கிராம ஊராட்சியில் தம்பிக்கோட்டைக்கு செல்லும் பாசன வாய்க்காலில் அமைந்துள்ள பாலத்தின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் சேதமடைந்து திறந்தநிலையில் உள்ளது. இந்த பாலத்தில் வாகன விபத்துக்கள் கால்நடை விபத்துக்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இந்த பாலத்தை பயன்படுத்திவரும் பொதுமக்கள். வாகன ஓட்டிகள் மற்றும் காலந்டைகள் பெரும் அச்சத்தோடு அப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இப்பாலத்திற்கான சாலை புதிய தார்சாலையாக இருந்தும் உயிர்பயத்தோடு தினம்தோறும் இப்பாலத்தை கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த பாலம் 25 அடிக்கு மேல் நீளம் கொண்டது. பாலத்தை கடக்கும் போது தவறி விழுந்தால் 25 அடி பள்ளத்தில் விழநேரிடும். இதில் தண்ணீர் செல்லும் போது தவறி விழுபவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்ல வாய்ப்புகள் உள்ளது. எனவே ஆபத்தை ஏற்படுத்தும் இப்பாலத்தில் உடனடியாக பக்கவாட்டில் தடுப்பு அமைத்து பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் உயிர் காக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Tags : bridge , Muthupettai, Bridge
× RELATED துப்புறதுக்கு கொஞ்சம் தடை விதிங்க ப்ளீஸ்...மன்றாடும் மத்திய அமைச்சர்