×

1,300 ஏக்கர் பரந்து விரிந்த கோரம்பள்ளம் குளம் தூர்வாரப்படுமா?

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ஆயிரத்து 300 ஏக்கர் பரந்து விரிந்துள்ள கோரம்பள்ளம் குளத்தை தூர் வாரவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாமிரபரணி ஆற்று பாசன வடி நில கோட்டங்களில் உள்ள வைகுண்டம் வடகால் கடைசியில் அமைந்துள்ளது கோரம்பள்ளம் குளம். தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதான குளமாக திகழும் இந்தக் குளம், மொத்தம் 1,300 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. மேலும் 12 அடி ஆழமுள்ள இக்குளத்தை முறைப்படி தூர்வாரினால் அதன் மொத்த கொள்ளவு 220 மில்லியன் கன அடியாக இருக்கும். இக்குளத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய கிராமங்களான கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம், மறவன்மடம், காலாங்கரை, அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், முள்ளக்காடு, வீரநாயக்கன்தட்டு, சிறுப்பாடு முதலான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 2,200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நெல், வாழை உள்ளிட்ட விளை பொருட்கள் விளைவிக்கப்படுகிறது. கடந்த 1888ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த புராதனமான குளம் அப்போது 48 ஷட்டர்களுடன் இருந்தது. ஆனால் காலப்போக்கில் உரிய பராமரிப்பின்றி சேதமடைந்ததால், 1967ல் 24 ஷட்டர்களாக மாற்றப்பட்டு 24 கண் புதுப்பிக்கப்பட்டது. தூத்துக்குடி வட்டாரத்திலேயே 7.5 கி.மீ. சுற்றளவு கொண்ட பிரம்மாண்ட குளம் இதுவாகும்.

ஆனால் தொடர்ந்து தூர்ந்து வந்த இந்த குளம் கடந்த 52 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இதனால் மொத்த ஆழமான 12 அடியில் தற்போது சுமார் 9 அடி வரையில் மண் நிறைந்து மண் மேடாகவும், உடைமரங்கள் வளர்ந்து காடு போல குளம் இருக்கும் இடமே தெரியாத நிலை உள்ளது. குளத்தில் முன்பு தண்ணீர் தேக்கப்பட்டால் ஒன்றரை ஆண்டுக்கு விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும். தற்போது 4 மாதங்களுக்கு கூட தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பழைய நிலையில் இருந்த இக்குளத்தில் 11 டிஎம்சி வரையில் தண்ணீர் சேமிக்கப்பட்டிருந்ததாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த குளம் தூர்ந்து போன நிலையில் கடந்த 2015ம் ஆண்டு இறுதியில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது இந்த குளத்தின் ஷட்டர்கள், வாய்க்கால்கள் வழியாக மட்டுமே 13 டிஎம்சி தண்ணீர் சேமிக்க முடியாமல் வீணாக கடலில் சென்று கலந்துள்ளது.

தற்போது இந்த குளத்தில் மழைக்காலங்களில் வரும் நீரை 2அடி உயரத்திற்கு கூட தேக்க முடியவில்லை. இதனால் ஒரு போகம் விவசாயத்திற்கே தண்ணீர் இல்லாமல் ஒரு சில மாதங்களில் தண்ணீர் வற்றி வறண்டு போகிறது. மேலும் இதன் சுற்றுப்பகுதி கிராமங்களிலும் நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் இந்த குளத்தினை தூர்வாரினால் 2,200 ஏக்கர் பரப்பளவிலான விவசாயமும் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேலான நிலங்களில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் நிலை உள்ளது. இந்தக்குளம் முறையாக தூர்வாரப்பட்டால் அப்பகுதி விவசாயத்தை மட்டுமல்லாமல் தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு பகுதி குடிநீர் தேவையை கூட சமாளிக்கமுடியும் என்றும், இதன் நீர்ப்பரப்பு பகுதி அதிகம் என்பதால் குளத்தில் நண்ணீர் மீன் வளர்ப்பும் துவக்கி அதன் மூலம் பெரிய வருவாய் ஆதாரமாக மாற்ற முடியும் என்றும் அதனால் இந்த குளத்தினை விரைவாக தூர்வாரிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் சார்பில் அனைத்து தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அறிவிப்போடு நின்றது: கோரம்பள்ளம் குளம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுக ஆட்சியின் துவக்கத்தில் தூர்வார திட்டமிடப்பட்டது. மேலும் அதிகாரிகள் இந்த குளத்தை தூர்வார சாட்டிலைட் உதவியுடன் திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்தனர். ரூ.18 கோடியில் இந்த குளம் தூர்வாரப்படும் என்றும் அதிகாரிகளும், அப்போதைய அமைச்சர்களும் தெரிவித்திருந்தனர். மேலும் தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழாவை முன்னிட்டு இந்த குளம் தூர்வாரப்பட்டு படகு குழாம் அமைக்கப்பட்டு சர்வதேச தரத்திற்கு சுற்றுலா மையமாக மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வெறும் அறிவிப்போடு நின்று போனது அத்திட்டம். இன்றுவரையில் அத்திட்டம் என்ன ஆனது நிதி ஒதுக்கப்பட்டதா அல்லது ஒத்திவைக்கப்பட்டதா என்றே தெரியவில்லை என்கின்றனர் அப்பகுதி விவசாயிகள்.

Tags : pond spread ,Koramallam , Koraballam, pool
× RELATED அதிகபட்ச வெப்பத்தில் ஈரோடு 8-வது இடம்