×

மேற்கு தொடர்ச்சி மலையில் வரலாறு காணாத வறட்சி... ஒரு சொட்டு தண்ணீர் கூட இன்றி வறண்டது ராமநதி அணை

கடையம்: மழை இல்லாததாலும், கோடை வெயில் கொளுத்தி வருவதாலும் நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் கடையம் ராமநதி அணை ஒரு சொட்டு தண்ணீர்கூட இன்றி வறண்டு கிடப்பதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் மொத்தம் 11 அணைகள் அமைந்துள்ளன. அவற்றில் முக்கியமான அணைகளில் ஒன்று கடையம் அருகே அமைக்கப்பட்ட ராமநதி அணை. 84 அடி கொள்ளளவு கொண்ட இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. அத்துடன் கடையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.  கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்ததால் ராமநதி அணையில் தண்ணீர் 3 முறை நிரம்பி வழிந்தது. விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் செழிப்பாக இருந்ததால் கார் பருவ நெல் சாகுபடியும், பிற பயிர்கள் சாகுபடியும் தங்கு தடையின்றி நடந்தது. அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவ மழை அவ்வப்போது போக்கு காட்டி சரிவர பெய்யாமல் ஏமாற்றியது. இருப்பினும் அணையில் இருந்த நீர் இருப்பு மற்றும் அவ்வப்போது மிதமாக பெய்த சாரல் மழையை நம்பி பிசான பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், மழை பொய்த்துப் போனதால் அணையில் இருந்து நீர்மட்டம் படிப்படியாக சரியத் துவங்கியது. நடப்பாண்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் துவங்குவதற்கு முன்பே கோடை வெயில் கடுமையாகக் கொளுத்தியது. இதனால் கடந்த பிப்ரவரி மாதமே அணையில் தண்ணீர் வெகுவாக குறைந்தது. கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கிய நாள்முதல் அனலின் தாக்கம் மேலும் அதிகரிப்பால் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்றது. இதனால் அணையில் தேங்கிக் கிடந்த சிறிதளவு நீரும் ஆவியாகி, தற்போது ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வெறும் கட்டாந்தரையாக காட்சியளிக்கிறது. இதே போல் மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்வேறு பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவி வருவதால் வன விலங்குகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன. கடையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனால் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யபட்டு வருகிறது. குடிநீர் கிடைக்கப் பெறாமல் அவதிப்படும் மக்களும், வேளாண் சாகுபடிக்காக காத்திருக்கும் விவசாயிகளும் தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்த்துள்ளனர்.

Tags : drought ,Western Ghats ,Ramanathy Dam , Water, ramanati dam
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...