×

ஒடிசாவில் ஐந்தாவது முறையாக அரியணை ஏறினார் நவீன் பட்நாயக் : ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

புவனேஷ்வர்: ஒடிசா முதலமைச்சராக 5-வது முறையாக நவீன் பட்நாயக் பதவியேற்றார். புவனேஸ்வரில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஒடிசா ஆளுநர் கணேஷிலால் அவர்கள் நவீன் பட்நாயக் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களின் பரிந்துரையில் பெயரில் ஆளுநர் கேபினட் அந்தஸ்துடன் 11 அமைச்சர்களுக்கும் 9 துணை அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  

5வது முறையாக ஆட்சி அமைத்த ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி

ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியும் பாஜ மற்றும்  காங்கிரஸ்  கட்சிகளும் மோதின. இதில் மொத்தமுள்ள 147 தொகுதியில் ஒன்றில் வேட்பாளர் இறந்ததால், 146 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. இங்கு ஆட்சி அமைக்க 74  இடங்கள் தேவை. இதில் ஆளும் பிஜு ஜனதா தளம் 112 இடங்களை கைப்பற்றியது. பாஜ 23, காங்கிரஸ்  9 இடங்களிலும் வென்றன. இதர கட்சிகள் 2 தொகுதியை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், ஒடிசாவில் பிஜு ஜனதா தள தலைவரும்,  முதல்வருமான  நவீன் பட்நாயக் தொடர்ந்து 5வது முறையாக ஆட்சியை பிடித்து சாதனை படைத்தார்.  இதேபோல், 21 மக்களவை தொகுதிகளில் பிஜு ஜனதா தளத்துக்கு 12 இடங்கள் கிடைத்தன. பாஜ 9 தொகுதிகளை கைப்பற்றியது.

இதையடுத்து, சட்டசபை பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவராக நவீன் பட்நாயக், எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்பட்டார்.  பின்னர், நவீன் பட்நாயக் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் கணேஷி லாலை சந்தித்து, ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு உரிமை கோரியதுடன், தன்னை ஆதரிக்கும் 112 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலையும் வழங்கினார்.அதை ஏற்றுக்கொண்ட கவர்னர், புதிய அரசு அமைக்குமாறு நவீன் பட்நாயக்குக்கு அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து, ஒடிசா முதல்-மந்திரியாக நவீன் பட்நாயக் தொடர்ந்து 5-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். புவனேஸ்வரில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கவர்னர் கணேஷி லால் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

சாதனை பட்டியலில் நாயக்


கடந்த 1997ம் ஆண்டு ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி பிஜு ஜனதா தளத்தை நவீன் பட்நாயக் உருவாக்கினார். மத்தியில் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவும் பதவி வகித்தார். பின்னர், 2000ல் ஆண்டு ஒடிசாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். அதன் பிறகு நடந்த  4 சட்டப்பேரவை தேர்தல்களிலும் அவருடைய கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி ஆட்சியைத் தக்க வைத்தது. நவீன் பட்நாயக் தொடர்ந்து முதல்வர் பதவியை வகித்தார். இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த போதிலும், ஒடிசாவில் இவருக்கு எதிர்ப்பு அலை கிளம்பவில்லை. குஜராத்தில் மோடி, மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு, திரிபுராவில் மாணிக் சர்க்கார் ஆகியோர் மட்டுமே நீண்ட காலமாக முதல்வராக இருந்து சாதனை படைத்துள்ளனர். அந்த வரிசையில் இப்போது நவீன் பட்நாயக்கும் சேர்ந்துள்ளார்.

Tags : Naveen Patnaik ,Governor ,Odisha , Biju Janata Dal, Odisha, Naveen Patnaik, sworn in, Governor
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...