×

திருவண்ணாமலையில் கருக்களைப்பில் ஈடுபட்ட பெண் போலிமருத்துவர்,கணவர் கைது: போலீசார் விசாரணை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்படுவதாக கிடைத்த புகாரின்பேரில் சென்னையில் இருந்து வந்த மருத்துவப் பணிகள் குழுவினர் பல்வேறு ஸ்கேன் மையங்கள், தனியார் மருத்துவமனைகளில் சோதனை செய்தனர். இதில் சில ஸ்கேன் மையங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். கருக்கலைப்பு செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செயலில் ஈடுபட்ட போலி டாக்டர் தம்பதி போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளனர்.

திருவண்ணாமலையில் 10ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு கருக்களைப்பில் ஈடுபட்ட பெண் போலிமருத்துவர், அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஈசானியலிங்கம் அருகில் காவியா ஜெனரல் ஸ்டோர்ஸ் நடத்திவரும் பிரபு மற்றும் அவரது மனைவி கவிதா. இவர்கள் இருவரும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த புகாரில் பலமுறை கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த  கவிதா கருக்கலைப்பிலும் ஈடுபட்டதாக புகார் வந்ததை அடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். இந்நிலையில் கலசப்பாக்கம் அருகே லாடாபுரம் கிராமத்தை சேர்ந்த கர்பிணிப்பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கும் போது  கையும் களவுமாக பிடிபட்டனர். கருக்கலைப்புக்காக வந்த பெண், அவரது கணவர் மற்றும் தாயாரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இதுவரை சுமார் 4000 பெண்களுக்கு கவிதா கருக்கலைப்பு செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Tags : Tiruvannamalai , Thiruvannamalai, female fake doctor, husband, arrested, police, investigation
× RELATED திருவண்ணாமலை கோயில் வழக்கை சிறப்பு...