×

சரக்குகள் போக்குவரத்து மேலாண்மைக்கு தனித்துறை ஏற்படுத்த 100 நாள் திட்டம்: வர்த்தக அமைச்சகம் பரிந்துரை

புதுடெல்லி: பல்வேறு அரசு துறைகளுக்கு இடையே சிறப்பான ஒத்துழைப்புக்காக சரக்குகள் விற்பனை வசதி மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்கு என்று தனியாக ஒரு துறையை ஏற்படுத்த மத்திய வர்த்தகஅமைச்சகம் உத்தேசித்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கடல் மார்க்கம், சாலை மார்க்கம், ரயில்கள் மூலம் சரக்குகள் ஏற்றி இறக்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து கவனிப்பதற்கு என்று ஒரு தனி துறை தற்போது இல்லை. எனவே, இதற்கு என்று தனித் துறையை ஏற்படுத்த 100 செயல்திட்டம் ஒன்று வர்த்தக அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. மே 30ம் தேதி பதவியேற்கும் புதிய அரசு இந்த பரிந்துரையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும்.

“சரக்குகள் வர்த்தக பரிவர்த்தனை மற்றும் போக்குவரத்துக்கு என்று தனித் துறையை ஏற்படுத்துவதன் மூலம் அரசு துறைகளுக்கு இடையே சிறப்பான ஒருங்கிணைப்பு இருக்கும் என்று அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார். தற்போது சரக்குகள் போக்குவரத்து மேலாண்மை, வர்த்தகத்துறையின்கீழ் செயல்படுகிறது.  இதற்கு சிறப்பு செயலாளர் அளவிலான அதிகாரி பொறுப்பு வகிக்கிறார். ஏற்றுமதியாளர்கள், சந்தையில் நிலவும் போட்டியை சமாளிக்க பொருள் போக்குவரத்து மேலாண்மை என்பது மிகவும் உதவியாக இருக்கும். அதேபோல், உள்நாட்டு வர்த்தகர்களுக்கு போக்குவரத்து செலவு குறைவதோடு, உரிய நேரத்தில் பொருள்கள் / சரக்குகள் வந்து சேரும். சரக்குகள் போக்குவரத்து எந்தவித இடையூறு இல்லாமல் நடைபெறும்.

இந்த துறையில், பல்வேறு அமைச்சகங்கள், ரயில்வே, சாலை, கப்பல் போக்குவரத்து ஆகிய துறைகள் இடையே ஒருங்கிணைப்பு தேவை என்றும் அந்த அதிகாரி கூறினார். போக்குவரத்து துறைக்கு ஊக்கம் அளிக்கவும் சரக்கு போக்குவரத்திற்கான செலவை குறைப்பதற்காகவும், விரைவாகவும் மேற்கொள்வதன் மூலம் தொழிலை மேம்படுத்தவும் இதற்கு என்று தனித் துறையை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த ஜனவரியில் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை கவுன்சில் யோசனை தெரிவித்து இருந்தது.. தேசிய அளவிலான பொருள் போக்குவரத்து மேலாண்மைக்கான கொள்கை வகுக்க 10 அம்ச செயல் திட்டத்தையும் பரிந்துரை செய்திருந்தது. இதற்காக புதிய சட்டவரைவு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த வரைவு மசோதா, தற்போது உள்ள 1993ம் ஆண்டு பல்நோக்கு மாதிரி சரக்கு போக்குவரத்து சட்டத்திற்கு மாற்றாக அமையும். பொருள் போக்குவரத்து மேலாண்மையை எளிமை படுத்தவும் சிறப்பாக அமல்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

* மத்தியில் புதிய அரசு மே 30ம் தேதி பதவியேற்கிறது. சரக்குகள் போக்குவரத்து மேலாண்மைக்கு என்று தனியாக துறை ஒன்றை ஏற்படுத்த 100 நாள் செயல் திட்டம் ஒன்றை அரசுக்கு வர்த்தக அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

* சரக்குகள் பரிவர்த்தனை மேலாண்மை தற்போது, சிறப்பு செயலாளர் அளவிலான அதிகாரி தலைமையில் வர்த்தக துறையின்கீழ் செயல்படுகிறது.

Tags : Ministry of Commerce , Goods transportation management, Specialist, Ministry of Commerce, Recommendation
× RELATED மின்சார வாகன கொள்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்