டோனி, கே.எல்.ராகுல் அபார சதம்: இந்திய அணி 359 ரன் குவிப்பு

கார்டிப்: வங்கதேச அணியுடனான உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில், லோகேஷ் ராகுல் மற்றும் டோனியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன் குவித்தது. சோபியா கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசியது. ரோகித், தவான் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர்.

தவான் 1 ரன் மட்டுமே எடுத்து முஸ்டாபிசுர் வேகத்தில் வெளியேற, இந்திய அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.10 ஓவர் முடிவில்  இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 34 ரன் மட்டுமே எடுத்திருந்தது. ரோகித் 19 ரன் (42 பந்து, 1 பவுண்டரி), கேப்டன் விராத் கோஹ்லி 47 ரன் (46 பந்து, 5 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினர். விஜய் ஷங்கர் 2 ரன்னில் ஆட்டமிழக்க, இந்தியா 22 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 102 ரன் எடுத்திருந்தது.

இந்த நிலையில், கே.எல்.ராகுல் - டோனி ஜோடி 5வது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி 164 ரன் சேர்த்தது. ராகுல் 108 ரன் (99 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி சப்பிர் ரகுமான் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து டோனியுடன் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இணைந்தார். இருவரும் 6வது விக்கெட்டுக்கு அதிரடியாக 59 ரன் சேர்த்தனர். ஹர்திக் 21 ரன் (11 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), டோனி 113 ரன் (78 பந்து, 8 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.

இந்தியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன் குவித்தது. தினேஷ் கார்த்திக் 7, ரவீந்திர ஜடேஜா 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச பந்துவீச்சில் ருபெல் உசேன், ஷாகிப் ஹசன் தலா 2, முஸ்டாபிசுர், சைபுதின், சப்பிர் ரகுமான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 360 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது.


Tags : Dhoni ,K. Lahore ,India , Dhoni, K.L.Rahul, good half, Indian team, run target
× RELATED இலங்கை அதிபர் நவ. 29-ம் தேதி இந்தியா வருகை