நியூசிலாந்துடன் பயிற்சி ஆட்டம் அடித்து நொறுக்கியது வெஸ்ட் இண்டீஸ்

பிரிஸ்டல்: நியூசிலாந்து அணியுடனான உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி 49.2 ஓவரில் 421 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பிரிஸ்டல் கவுன்டி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர்களாக கிறிஸ் கேல், எவின் லூயிஸ் களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர். கேல் 36 ரன் (22 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி போல்ட் வேகத்தில் வில்லியம்சன் வசம் பிடிபட்டார்.

அடுத்து லூயிஸ் - ஷாய் ஹோப் இணை 2வது விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்தது. லூயிஸ் 50 ரன் (54 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), டேரன் பிராவோ 25 ரன், ஹெட்மயர் 27 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அதிரடியை தொடர்ந்த ஷாய் ஹோப் 101 ரன் (86 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி போல்ட் வேகத்தில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நிகோலஸ் பூரன் 9 ரன்னில் வெளியேற...கேப்டன் ஜேசன் ஹோல்டர் 47 ரன் (32 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), ஆந்த்ரே ரஸ்ஸல் 54 ரன் (25 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி விடை பெற்றனர்.

கார்லோஸ் பிராத்வெய்ட் 24 ரன், கெமார் ரோச் 1 ரன்னில் பெவிலியன் திரும்ப, வெஸ்ட் இண்டீஸ் 49.2 ஓவரில் 421 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஆஷ்லி நர்ஸ் 21 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து பந்துவீச்சில் டிரென்ட் போல்ட் 4, மேட் ஹென்றி 2, நீஷம், சான்ட்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 422 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து, 9.5 ஓவரில் 33 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

Tags : West Indies ,New Zealand , New Zealand, practice game, beat and crash, West Indies
× RELATED ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்