×

பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு பிரதமராக மோடி நாளை பதவியேற்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி நாளை பதவியேற்கிறார். நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு நடந்த மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், பாஜ மட்டுமே 303 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. தேஜ கூட்டணியின் நாடாளுமன்ற கட்சி தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, தொடர்ந்து 2வது முறையாக மோடி பிரதமராக நாளை பதவி ஏற்க உள்ளார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இரவு 7 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்குகிறது. இதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள், ஜனாதிபதி மாளிகையில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2014ல் முதல் முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற போது, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இம்முறை பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் இலங்கை, வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம் மற்றும் தாய்லாந்து நாடுகள் இடம் பெற்றுள்ளன.

இலங்கை அதிபர் சிறிசேனா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். மேலும், மொரீசியஸ், கிர்கிஸ்தான் நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் மற்றும் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டுள் ளது. நாளைய பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடியுடன், யார், யார் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதவியேற்பு விழாவில் மம்தாவும் பங்கேற்பு!
கடந்த மார்ச்சில் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மேற்கு வங்கத்தில் பாஜ - திரிணாமுல் இடையே மோதல் ஆரம்பமாகி விட்டது. தேர்தல் முடியும் நேரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையிலான மோதல் உச்சத்துக்கு சென்று விட்டது. இதனால், திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜிக்கும் மோடிக்கும் கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

போதாத குறைக்கு, திரிணாமுல்லை சேர்ந்த 2 எம்எல்ஏ.க்கள், 60 கவுன்சிலர்கள் நேற்று ஒரேநாளில் பாஜ.வுக்கு தாவி விட்டனர். இது, மம்தாவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவுக்கு மம்தாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. அதை ஏற்று, விழாவில் பங்கேற்பதை அவரும் உறுதி செய்துள்ளார்.

Tags : Modi ,countries , BIMSTEC Country, Leaders, Participation, PM Modi, tomorrow swearing
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...