×

காங்கிரஸ் தலைவராக நீடிக்க விரும்பவில்லை பதவி விலகும் முடிவில் ராகுல் உறுதி

* மூத்த தலைவர்களின் சமாதான முயற்சி தோல்வி
* மீண்டும் 4 நாளில் கூடுகிறது செயற்குழு கூட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார். அவரை சமாதானப்படுத்த மூத்த தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க மீண்டும் 4 நாளில் காங்கிரஸ் செயற்குழு கூடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராகுல் காந்தி தலைமையில் மக்களவை தேர்தலை சந்தித்த காங்கிரஸ், தொடர்ந்து 2வது முறையாக தோல்வியை சந்தித்தது. கடந்த 2014ல் 44 இடங்களில் மட்டுமே வென்ற இக்கட்சி, 2019 தேர்தலில் 52 இடங்களில் வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற மீண்டும் தவறியது. காந்தி குடும்பத்தினர் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த அமேதி தொகுதியில் ராகுல் காந்தியே தோல்வி அடைந்தார்.

மேலும், கடந்த 5 மாதத்திற்கு முன் ஆட்சியை பிடித்த ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை ராகுலால் ஜீரணிக்க முடியவில்லை. தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரசின் ஜார்கண்ட், அசாம், பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஒடிசா மாநில தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த தோல்வியால் கடும் அதிருப்தி அடைந்த ராகுல், கடந்த சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தனது குமுறல்களை கொட்டித் தீர்த்தார்.

மகன்களுக்கு சீட் கேட்டு சில மூத்த தலைவர்கள் தனக்கு நெருக்கடி கொடுத்ததாகவும், பிரசாரத்திலும் கட்சியை விட சொந்த நலனே முக்கியமாக கருதி செயல்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அதோடு, தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், அடுத்த தலைவர் காந்தி குடும்பத்தை சேராதவராக இருக்க வேண்டும் எனவும் ராகுல் கூறினார்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் கடும் குழப்பம் நிலவி வருகிறது. ராகுலை சமாதானப்படுத்தும் முயற்சியில் பல மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சோனியாவுக்கு நெருக்கமான மூத்த தலைவர் அகமது படேல், கே.சி.வேணுகோபால் ஆகியோர் ராகுலை சந்தித்து பேசினர். ஆனால், இது கட்சி நிர்வாகம் சம்மந்தப்பட்ட வழக்கமான சந்திப்பு என அத்தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அதே போல, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ராகுலை சந்திக்க நேற்று முன்தினம் நேரம் கேட்டிருந்தார். ஆனால், நேற்று முன்தினம் ராகுல் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார். இதனால், கெலாட்டால் அவரை சந்திக்க முடியவில்லை. ராஜஸ்தானில் 25 தொகுதியிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.

அங்கு மூத்த தலைவரான அசோக் கெலாட் தனது மகன் வைபவ் போட்டியிடும் தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்தியதாகவும், மற்ற தொகுதிகளை புறக்கணித்ததாகவும் ராகுல் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், அசோக் கெலாட் மற்றும் ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் நேற்று ராகுலை டெல்லி துக்ளக் லேனில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.

அப்போது, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் உடனிருந்தார். இந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து மூத்த தலைவர்கள் ராகுலை சமாதானப்படுத்த முயற்சித்தாலும், பதவி விலகும் முடிவில் அவர் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக  அக்கட்சியின் உயர்மட்ட அதிகாரம் கொண்ட செயற்குழு மீண்டும் அடுத்த 4 நாளில் கூட இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. மேலும், கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதிலும் ராகுல் உறுதியாக இருக்கிறார். எனவே, பல மூத்த தலைவர்களின் முக்கிய பொறுப்புகள் பறிக்கப்பட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் தெரிகிறது.

அடுத்தது என்ன?
அடுத்ததாக, கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்பின், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் காங்கிரஸ் தலைவரை ராகுல் தேர்ந்தெடுப்பார். பின்னர், கட்சியின் புதிய தலைவர் யார் என்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகிய மூவரும் ஏற்றுக்கொள்ளும் நபரே புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்கொலைக்கு சமமானது; லாலு
ராகுல் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டுமென காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மட்டுமின்றி, எதிர்க்கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தனது டிவிட்டர் பதிவில், ‘ராகுலின் பதவி விலகல் முடிவானது, காங்கிரசுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்கும் தற்கொலை முடிவாக அமையும். பாஜ.வின் பொறியில் ராகுல் விழுந்து விடக்கூடாது. காந்தி குடும்பத்தை சேராத ஒருவரை காங்கிரஸ் தலைவராக்கினால், அவரை பொம்மை தலைவர் என விமர்சிப்பார்கள். அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு அப்படியொரு வாய்ப்பை ராகுல் ஏன் தர வேண்டும்?’ என கூறியுள்ளார்.

‘தலைவராக ராகுல் தொடர வேண்டும்’

காங்கிரசின் மூத்த தலைவரான வீரப்ப மொய்லி அளித்த பேட்டியில், ‘‘மோடி வென்று விட்டார் என்பதற்காக ராகுல் தனது தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டிய அவசியமில்லை. பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த கட்சிதான் காங்கிரஸ். எனவே, ஒரு மக்களவை தேர்தலோ அல்லது 2, 3 சட்டப்பேரவை தேர்தலோ கட்சியின் வளர்ச்சியை நிர்ணயித்து விட முடியாது. எனவே, கட்சியின் தலைவர் பதவியில் ராகுல் தொடர வேண்டும். அவர்தான் கட்சிக்கு ஊக்கமே. காங்கிரஸ் குடும்பத்தை வழிநடத்த சரியான நபர் அவரே. அவர், காந்தி குடும்பம் என யோசிக்கக் கூடாது, காங்கிரஸ் குடும்பம் என்றே நினைக்க வேண்டும்,’’ என்றார்.

Tags : Rahul ,president ,Congress , Congress leader, do not want to continue, resign, Rahul
× RELATED சொல்லிட்டாங்க...