×

சென்னையில் 70 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம் தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

சென்னை: 70 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம் சென்னை மக்களை வாட்டி வதைத்து வருவதால், நட்சத்திர விடுதிகள், வணிக நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. அபார்ட்மென்ட்களில் வசிப்பவர்கள் குளிக்க தண்ணீர் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். எப்போதெல்லாம் பருவமழை பொய்த்து விடுகிறதோ, அதற்கடுத்த ஆண்டு சென்னை வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்கிறது.   சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டு பாளம் பாளமாக வெடித்து காணப்படுகிறது. ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் மேய்ச்சல் நிலமாக மாறிவிட்டன. இதனால் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி சென்னையில் நிலவி வருகிறது. எங்கு பார்த்தாலும் மக்கள் குடங்களுடன் லாரி தண்ணீருக்காக காத்து கிடப்பதை தான் பார்க்க முடிகிறது.  

சென்னையில் ஒட்டுமொத்த நீர்நிலைகளில் மொத்த தண்ணீர் இருப்பு தற்போது 1.3 சதவீதம் மட்டுமே உள்ளது. அதாவது, முக்கிய ஏரிகள் முற்றிலும் வறண்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக வீராணம் ஏரியில் மட்டும் கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது. குடிக்க தண்ணீர் இல்லாத காலம் மாறி, இப்போது குளிக்கவும், ஏன் பாத்திரம் கழுவ கூட தண்ணீர் இல்லாத நிலை உருவாகியுள்ளது. ஒரு குடம் தண்ணீர் ரூ.20 வரை கொடுத்து வாங்க மக்கள் தயாராக உள்ளனர். தனியார் லாரி என்றாலும், சென்னை குடிநீர் வாரிய லாரி வந்தாலும் ஒரு குடத்துக்கு இவ்வளவு பணம் என்ற கட்டணத்துடன்தான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. அப்படி வாங்குவதற்கும் மக்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.

பகல் இரவு என்று பாராமல் தங்கள் வேலைகளை எல்லாம் போட்டு விட்டு காத்திருந்து தண்ணீரை வாங்கி வருகின்றனர். ஒரு நாளைக்கு 5 குடம் தண்ணீர் இருந்தால்தான் அன்றாட தேவைகளை சமாளிக்க முடியும் என்ற பரிதாப நிலையே இதற்கு காரணம். நகர் பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் ஏராளமானோர் வீடுகளை காலி செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, 300 முதல் 500 வீடுகளை கொண்ட அபார்ட்மென்ட் வளாகங்களில் வாழும் மேல் தட்டு மக்களின் நிலையோ தண்ணீருக்காக அல்லோலப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தினமும் அரை மணி நேரம் மட்டுமே வீட்டு குழாய்களில் தண்ணீர் திறந்துவிடுகின்றனர். அதற்காக தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் வாங்குகின்றனர். அதுவும் கிடைக்கவில்லை என்றால் அவர்களின் அன்றைய கதி அந்தோ பரிதாபம் தான்.

தங்கும் விடுதிகள், பெரிய வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள் என அனைத்தும் தனியார் லாரி தண்ணீரையே நம்பி இருக்கின்றன. அதற்கும் கடும் டிமாண்ட் நிலவி வருவதால் தண்ணீருக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் அந்நிறுவனங்கள் விழிபிதுங்கி வருகின்றன. ஒரு கட்டத்தில் தண்ணீர் ஒட்டுமொத்தமாக கிடைக்காத பட்சத்தில் இவைகளை மூட வேண்டிய நிலைக்கு அதன் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அடுத்த சில நாட்களில் தண்ணீர் என்பது கிடைக்காத அரிய பொருளாக மாறவும் வாய்ப்புள்ளது. இதற்கு எல்லாம் தமிழக அரசோ, சென்னை குடிநீர் வாரியமோ எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளது. மாற்று வழிகள் அனைத்தும் இறுதி கட்டத்துக்கு போய்விட்டது.
தற்போதைய ஒரே நம்பிக்கை தென்மேற்கு பருவமழை மட்டுமே. அதுவும் தாமதமாகிவிட்டால், குளிப்பதை நினைத்து கூட பார்க்க முடியாத பரிதாபத்துக்கு ஆளாகிவிடுவோமே என்பது சென்னை மக்களின் குமுறலாக உள்ளது.

Tags : Chennai ,closure ,businesses , Chennai, water famine, Hotels, business establishments,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...