×

அனகாபுத்தூர் நகராட்சியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

பல்லாவரம்: அனகாபுத்தூர் நகராட்சியில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து, அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பல்லாவரம் அடுத்துள்ள அனகாபுத்தூர் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, நகராட்சி நிர்வாகம் பொது குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நகராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால், போதிய குடிநீரின்றி இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். மேலும், எப்போது தண்ணீர் வரும் என்று தெருகுழாய் அடியில் காத்துக் கிடக்கும் நிலை உள்ளது.  மேலும், நீண்ட நாட்கள் கழித்து வரும் குடிநீரும் கூட சுத்தமானதாக வருவதில்லை. மாசடைந்து சுகாதாரமற்ற நிலையில் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் அனகாபுத்தூர் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது, கோடை காலம் தொடங்கி உள்ளதால், இப்பகுதி மக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இப்பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என கூறப்படுகிறது.

இதை கண்டித்து, அப்பகுதி மக்கள் நேற்று அனகாபுத்தூர் அம்பேத்கர் சிலை அருகே, குன்றத்தூர் - பல்லாவரம் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார் மற்றும் அனகாபுத்தூர் நகராட்சி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

அதனை ஏற்று பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், ‘‘கோடைகாலம் வந்தாலே, அனகாபுத்தூர் பகுதி மக்கள் குடிநீருக்காக திண்டாடும் சூழ்நிலை வாடிக்கையாக உள்ளது. எங்கள் பகுதியில் குடிநீர் பஞ்சத்தை போக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பம்மல் கல்குவாரி குட்டையில் இருந்து, தண்ணீர் எடுத்து அதனை சுத்திகரித்து அனகாபுத்தூர் மற்றும் பம்மல் பகுதி மக்களுக்கு குடிநீராக விநியோகம் செய்வதாக தெரிவித்தனர். பல கோடி செலவு செய்து அந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது வரை அந்த திட்டம்  பயன்பாட்டிற்கு வரவில்லை. இதே நிலை தொடர்ந்தால் எங்களது போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடிக்கும்,’’ என்றனர்.

கமிஷனரிடம் மனு:
பல்லாவரம் நகராட்சி 18வது வார்டுக்கு உட்பட்ட ஏஜிஎஸ் பகுதி பொதுமக்கள் பல்லாவரம் நகராட்சி ஆணையர் செந்தில் முருகனை நேற்று நேரில் சந்தித்து, மனு ஒன்றை அளித்தனர். அதில், தங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதி அளித்தார்.


Tags : road ,municipality ,Anakaputhur , Anakaputhur municipality, not drinking water, condemned, civilians, road stroke
× RELATED பல்லாவரம் அருகே மதுபோதை தகராறு:...