×

8 வழிச்சாலைக்கு அமைச்சர் ஆதரவு சேலத்தில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்: தேர்தல் தோல்விக்கு பழிவாங்க துடிப்பதா?

சேலம்: சேலம்-சென்னை இடையே 10 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் விளைநிலங்களை அழித்து உருவாகும் இச்சாலைக்கு விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த திட்டம் நிச்சியம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறினார். இச்சூழலில் நேற்று அமைச்சர்  பாண்டியராஜன், 8 வழிச்சாலை திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு கொடுத்து உள்ளதாகவும், இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த கருத்திற்கு, 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் சேலம் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 8 வழிச்சாலை தொடங்கும் பகுதியான உத்தமசோழபுரத்தில் நேற்று மதியம், பல்வேறு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் திரண்டு, விளைநிலத்தில் கருப்பு கொடி ஏந்தியபடி போராட்டம் நடத்தினர். அமைச்சரின் பேச்சை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது விவசாயிகள் கூறுகையில், ‘‘நீதிமன்ற உத்தரவை மீறி முதல்வரும், அமைச்சர்களும் தொடர்ந்து இந்த திட்டத்தை நிறைவேற்ற ஆர்வம் காட்டுகின்றனர். அது ஏன் என்று தெரியவில்லை. தேர்தலில் தோல்வி அடைந்ததால், விவசாயிகளை பழிவாங்க அதிமுக அரசு துடிக்கிறது. எங்களின் எதிர்ப்பையும் மீறி இந்த திட்டத்தை கொண்டு வர முயற்சித்தால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். வரும் உள்ளாட்சி தேர்தலிலும் தக்க பதிலடி கொடுப்போம். ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றி பெற முடியாதபடி விவசாயிகளின் பணி இருக்கும்,’’ என்றனர்.




Tags : Minister ,Black Flag ,defeat , Ministerial, support ,black flag, Election Failure?
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...