வேலை வாங்கித் தருவதாக அரசு அலுவலக வளாக துறைகளை காட்டி பணம் மோசடி செய்யும் கும்பல்: தமிழக பொதுப்பணித்துறை கமிஷனரிடம் புகார்

சென்னை: சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, வணிகவரித்துறை, வேளாண்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் உள்ளன. இந்த  அலுவலகங்களில் ஆயிரத்துக்கும் ேமற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு தினமும் பொதுமக்களை அதிகாரிகள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த வளாகத்தில் அமைந்துள்ள அரசு அலுவலகங்களில் வேலை வாங்கி தருவதாகவும், டெண்டர் எடுத்து தருவதாகவும் கூறி சிலர் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பெற்று ேமாசடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.  இதையடுத்து எழிலக வளாகங்களில் பாதுகாப்பிற்காக 25க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் புழல் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய வாலிபர் ஒருவருக்கு மத்திய அரசு பணியில் வேலை வாங்கி தருவதாக கூறி எழிலக வளாகத்திற்குள் அழைத்து வந்துள்ளனர். பின்னர் எழிலக வளாகத்தில் அந்த வாலிபர் மற்றும் அவரது  பெற்றோரை நிற்க வைத்து விட்டு, அவர்களிடம் ரூ.50 ஆயிரம் பணம் வாங்கி கொண்டு ெசன்று விட்டதாக கூறப்படுகிறது. இதேபோன்று இதுவரை 3 முறைக்கு மேல் வேலை வாங்கி தருவதாக புகார் எழுந்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் தொடர்பான உருவத்துடன் சிசிடிவி பதிவை வைத்து அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இருப்பினும் தொடர்ந்து சிலர் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

இதையடுத்து தமிழக பொதுப்பணித்துறை சார்பில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் மனு அளித்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த புகார் மனுவில், அரசு வேலை வாங்கி தருவதாக இளைஞர்களை ஏமாற்றி  சிலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும் எழிலக வளாகத்தில் போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்து இடைத்தரகர்கள், வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபடுபவர்கள்  மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Commissioner ,Public Works Department , job, Complaint , money , Complaint , Tamil Nadu
× RELATED திருமாவளவன் குறித்து அவதூறு கருத்து...