×

காங். அரசுக்கு ஆதரவு வாபசா? ராஜஸ்தான் பகுஜன் எம்எல்ஏக்கள் ஜூன் 1ல் மாயாவதியுடன் சந்திப்பு: முக்கிய முடிவுகள் பற்றி ஆலோசனை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் அக்கட்சியின் தலைவர் மாயாவதியை வரும் 1ம் தேதி டெல்லியில் சந்தித்து, முக்கிய முடிவுகள் பற்றி ஆலோசிக்க உள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்தாண்டு டிசம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 200 இடங்களில், காங்கிரஸ் 100 தொகுதிகளிலும் அதன் கூட்டணியான ராஷ்டிரிய லோக் தளம் ஒரு தொகுதியிலும் வென்றது. இது தவிர 6 தொகுதிகளில் வென்ற பகுஜன் சமாஜ், வெற்றி பெற்ற 13 சுயேச்சைகளில் 12 பேர், காங்கிரசுக்கு ஆதரவளித்ததைத் தொடர்ந்து அங்கு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு நடந்து வருகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜ தனிப்பெரும்பான்மையுடன் 303 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது. காங்கிரஸ் வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் ராஜஸ்தானில் காங்கிரசுக்கு ஆதரவளித்து வரும் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள், அக்கட்சியின் தலைவர் மாயாவதியை டெல்லியில் ஜூன் 1ம் தேதி சந்திக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பகுஜன் சமாஜ் எம்எல்ஏ வாஜிப் அலி கூறுகையில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவு தொடரும். மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் கட்சியின் செயல்பாடு எவ்வாறு இருந்தது, எதிர்காலத்தில் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து கட்சியின் தலைவர் மாயாவதி உடனான சந்திப்பின் போது கலந்து ஆலோசிக்கப்பட உள்ளது. மாநிலத்தின் ஆளுநர் கல்யாண் சிங்கை நேற்று முன்தினம் சந்திக்கவிருந்தது கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. கட்சித் தலைமையுடனான ஆலோசனைக்கு பின்னர் ஆளுநரை சந்திப்பது பற்றி முடிவு எடுக்கப்படும்,’’ என்றார்.

Tags : BSP MLAs ,government ,Rajasthan ,Mayawati , Rajasthan, Bahujan MLAs, Mayawati,
× RELATED மோடியின் வெறுப்பு பேச்சு தேர்தல் ஆணையம் விசாரணை