×

இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஒடிசாவில் 66 எம்எல்ஏ.க்கள் குற்ற பின்னணி உடையவர்கள்: ஆளும் பிஜு ஜனதா தளம் முதலிடம்

புவனேஷ்வர்: ஒடிசாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ.க்களில் பாதி பேர் குற்றப்பின்னணி உடையவர்கள். இது, 2014ம் ஆண்டைக் காட்டிலும் 11 சதவீதம் அதிகமாகும். ஒடிசாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த மாநிலத்தின் மொத்த சட்டப்பேரவை இடங்கள் எண்ணிக்கை 147. இதில், தேர்தலில் நேரத்தில் ஒரு வேட்பாளர் இறந்ததால், இதைத் தவிர மற்ற இடங்களில் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் பிஜு ஜனதா தளம் 112 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எம்எல்ஏ.க்களில் 67 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக, ஒடிசா தேர்தல் கண்காணிப்பு சங்கமும், ஜனநாயக மறுசீரமைப்பு சங்கமும் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஒடிசாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்எல்ஏ.க்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குற்றப் பின்னணி உடையவர்கள். கடந்த 2014ம் ஆண்டு 52 எம்எல்ஏ.க்கள், அதாவது 35 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருந்தன. இந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ.க்களில் 46 சதவீதம் பேர், அதாவது 67 பேர் குற்றப் பின்னணி உடையவர்களாக உள்ளனர். இது, கடந்த 2014ம் ஆண்டு இருந்தவர்களை காட்டிலும் 11 சதவீதம் அதிகமாகும். இவர்களில் 49 பேர் மீது கடத்தல், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற 112 பிஜு ஜனதா தளம் எம்எல்ஏ.க்களில் 46 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் 33 பேர் கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள். பாஜ.வில் தேர்வு செய்யப்பட்ட 33 எம்எல்ஏ.க்களில் 14 பேர் குற்ற வழக்குகளிலும், இவர்களில் 10 பேர் மீது தீவிர கிரிமினல் வழக்குகளும் உள்ளன. இதேபோல், தேர்வான 9 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களில் 6 பேர் குற்றப் பின்னணி உடையவர்கள். இதர கட்சிகளில் வெற்றி பெற்ற ஒருவர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Odisha ,Biju Janata Dal , Election, winners, Odisha, criminal background, Biju Janata Dal,
× RELATED 2 தொகுதியில் ஒடிசா முதல்வர் போட்டி