×

மக்களவை தேர்தலில் பாஜ அல்ல எலக்ட்ரானிக் இயந்திரமே ஜெயித்தது: டி.டி.வி தினகரன் விமர்சனம்

பெங்களூரு: ‘‘மக்களவை தேர்தலில் பாஜ வெற்றி பெறவில்லை. மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரம்தான்  வெற்றி பெற்றது’’ என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் விமர்சித்துள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்  அடைக்கப்பட்டுள்ள தண்டணை கைதி சசிகலாவை நீண்ட நாட்களுக்கு பின்பு நேற்று  காலை அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.  அப்போது மக்களவை தேர்தல் தோல்வி மற்றும் கட்சியின் செயல்பாடுகள் குறித்து  சசிகலா கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. மேலும் வரும் நாட்களில் கட்சியை எப்படி  வழிநடத்துவது, தொண்டர்களை எப்படி உற்சாகப்படுத்துவது என்பது குறித்து  ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இதையடுத்து சிறைக்கு வெளியே தினகரன் அளித்த பேட்டி: மக்களவை  தேர்தல் முடிவுகள் குறித்து சசிகலாவிடம் பேசினேன். அவர், ஊடகங்கள் வாயிலாக  தேர்தல் முடிவுகளை தெரிந்து கொண்டதாக கூறினார். மேலும், இந்த முடிவுகளை  கண்டு யாரும் சோர்வு அடைய வேண்டாம். தொடர்ந்து மக்கள் பணியாற்றுங்கள்  என்று தெரிவித்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் இருந்து  பல்வேறு தேர்தல்களை சந்தித்தவர் சசிகலா. அவர் அனுபவசாலி என்ற முறையில்  எங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் அமமுக  30 தொகுதிகளில் உள்ள 588 வாக்கு சாவடிகளில் பூஜ்ஜிய வாக்குகள்  பதிவாகியிருப்பதாக தெரியவந்துள்ளது. இதை எங்களால் நம்ப முடியவில்லை. எங்கள்  வாக்கு வங்கிகள் எங்கு சென்றது என்பது தெரியவில்லை. அதுகுறித்து  விசாரித்து வருகிறோம். முறையான ஆதாரங்களை திரட்டி தேர்தல் ஆணையத்திடம்  முறையிட இருக்கிறோம்.

தேனி தொகுதியில் முறைகேடு நடந்ததாக  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றம் சாட்டினார். நானும் அதே குற்றச்சாட்டைதான்  முன் வைக்கிறேன். ஆனால் அதற்கு முன்னதாக முறையான ஆதாரங்களை திரட்டி  வருகிறோம். இந்த தேர்தல் வெற்றி பாஜவிற்கு கிடைத்தது அல்ல. வாக்கு  இயந்திரங்களுக்கு கிடைத்த வெற்றி. வளர்ந்த நாடுகளில் வாக்கு சீட்டு முறைகள்  கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் நம் நாட்டில் மட்டும் ஏன் இயந்திரங்கள்  பயன்படுத்தப்பட்டு வருகிறது?.  ஏனென்றால் இருந்த இடத்தில் இருந்தே  எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும். இதை கருத்தில்  கொண்டுதான் சந்திரபாபு நாயுடு வாக்கு சீட்டு முறைவேண்டுமென்ற கருத்தை  முதலில் முன் வைத்தார். தற்போது நாங்கள் அதே கருத்தை முன் வைத்தால்  தோல்வியடைந்ததால் இயந்திரங்கள் மீது புகார் அளிப்பதாக கூறுவார்கள். அதனால்  முறையான ஆதாரங்களை சேகரித்து, அதன் பின்னர் குற்றச்சாட்டை முன் வைக்க  விரும்புகிறோம். நாங்கள் குற்றம் சாட்டும்போது பிற கட்சிகளும் எங்களுடைய  கருத்துகளை ஏற்றுக் கொள்வார்கள். தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சியை  முடிவுக்கு கொண்டுவர அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு  வந்தால் எங்கள் ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள். அவர்கள் யார் என்பது  உங்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றார்.

Tags : BJP ,election ,Lok Sabha , Lok Sabha election, DVV Dinakaran, review
× RELATED மக்களவை தேர்தலில் சூரத் பா.ஜ வேட்பாளர்...