×

சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு : விசாரணையை ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது எழும்பூர் நீதிமன்றம்

சென்னை: சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைத்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, அவரது அக்கா மகன் பாஸ்கரன் ஆகியோர் 1996-97 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து ஜெஜெடிவிக்கு எலெக்ட்ரானிக் கருவிகள் வாங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், கொடநாடு டீ எஸ்டெட் வாங்கியதில் பல கோடி ரூபாய் வெளிநாடுகளில் இருந்து பண பறிமாற்றம் செய்துள்ளதாகவும் புகார் எழுந்தது.
 
இதையடுத்து அமலாக்கத்துறையினர் சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது 4 அந்நிய செலவாணி மோசடி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் நீதிமன்றம் முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் நீதிபதி கேள்விக்கு காணொலி காட்சியில் பதில்தர சசிகலாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலாவின் தரப்பில் உயர்நீதிமன்ற உத்தரவு நகல் சமர்ப்பிக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து சசிகலாவிடம் கேள்விகள் கேட்க ஏதுவாக வழக்கு ஆவணங்களை தமிழில் மொழிபெயர்பதற்கான விசாரணையை ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அன்று சசிகலா காணொளி காட்சி மூலமாகவும் பாஸ்கரன் நேரிலும் ஆஜராவதற்கான தேதி முடிவு செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  


Tags : court ,Egmore ,Sasikala , Sasikala, Foreign exchange fraud, Egmore court, order
× RELATED உள்நோக்கத்துடன் பொய் குற்றச்சாட்டு...