புதுவை அரசுக்கு அதிகாரம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி கிரண்பேடி உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லி :புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கிரண்பேடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் கிரண்பேடி மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிரண்பேடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு


யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை பறித்து மத்திய உள்துறை அமைச்சகம் துணைநிலை ஆளுநர் வசம் கொடுத்ததால் கடந்த 3 ஆண்டுகளாக கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி  அமைச்சரவைக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அதிகாரத்தை பயன்படுத்தி புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமியின் அதிகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகமாக தலையீடு செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுவையை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

துணைநிலை ஆளுநர்  கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை என தீர்ப்பு

நீதிபதி மகாதேவன் வழங்கிய உத்தரவில்,”முதலமைச்சரின் அதிகாரத்திலும் அன்றாட அலுவல் வேலைகளில் தலையிடவும், மேலும் அரசு சார்ந்த கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிடவும் துணைநிலை ஆளுநர்  கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை. இது தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பும் ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பாக முறையீடு

இந்த நிலையில்  கிரண்பேடி தரப்பில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பாக கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் கோரிக்கையை வைத்தார். அதில்,” கிரண்பேடியின் அதிகாரம் ரத்து என்ற உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரணை நடத்தி ஒரு இறுதி உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

இதையடுத்து தலைமை நீதிபதி உத்தரவில்,”புதுவை மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்பான மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிக்கிறது. அதற்கான அவசியமும் தற்போது இல்லை. மேலும் இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு  எந்தவித தடையும் விதிக்க முடியாது. இதுகுறித்து ஜூலை மாதத்தில் வேண்டுமானால் முறையீடு செய்தால் விசாரணை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல்


இந்நிலையில் புதுவை அரசுக்கு அதிகாரம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி கிரண்பேடி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பால் புதுவை மாநிலத்தில் அரசுப் பணிகள் முடங்கி விட்டதாக துணைநிலை ஆளுநர் மனுவில் புகார் அளித்துள்ளார்.

மேலும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பிறகு புதுச்சேரி அரசு அனைத்து துறை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், அரசின் உத்தரவையே அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்றும் அரசின்  கட்டுப்பாட்டில்தான் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றும் கிரண்பேடி மனுவில் தெரிவித்தார்.

மேலும் இவ்வகையான சுற்றறிக்கை அரசு அதிகாரிகளை மிரட்டுவதுப் போல் உள்ளது என்றும் ஆதலால் உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அரசு அதிகாரிகள் யாருடைய அதிகாரத்தின் கீழ் செயல்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு விளக்கம் கேட்டும் கிரண்பேடி மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே இந்த மனு வருகிற வியாழக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது. 


Tags : Supreme Court of India ,Madras High Court , Puducherry, Kiranpadi, Supreme Court, Deputy Governor, Judge
× RELATED பிற மாநிலங்களில் லோக் ஆயுக்தா எவ்வாறு...