×

வி.கைகாட்டி பெரிய நாகலூரில் 300 ஆண்டுகளாக இயற்கையான முறையில் குளத்து நீரை சுத்திகரிக்கும் முன்னோர்கள்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகில் பெரியநாகலூர் கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோவிலேரி என்ற குளத்தை ஊர் பொதுமக்கள் குடி நீருக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த குளத்தில் உள்ள நீரைப் பயன்படுத்துவதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்து அதனை இன்றளவும்; கடைப்பிடித்து வருகிறார்கள். நவீன காலம் என்று பலரும் பல ஊர்களில் நீரில் அசுத்தம் இருக்கிறது என சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அருந்தும் கலாச்சாரம் மேலோங்கி வரும் வேளையில் இந்த கிராம மக்கள் இந்த குளத்தினைச் சுற்றியுள்ள தேத்தான்கொட்டை மரத்திலிருந்து கீழே விழும் தேத்தான்கொட்டையால் இயற்கையாகவே சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அருந்துகின்றனர். இந்த தண்ணீரினை குடிக்கப் பயன்படுத்தும் மக்கள் குறைந்தபட்சம் 80 வயது வரை வாழ்ந்திருக்கிறார்கள் என்பது முக்கிய அம்சமாகும். மேலும் இந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்கள் வரவில்லை என கூறுகின்றனர். மேலும் இந்தக்குளத்தில் நீர் எடுக்க சில கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார்கள்.

சுயக் கட்டுப்பாட்டுடனே குளத்தில் ஆடு மாடுகளை நீர் அருந்த விடுவதில்லை, மக்கள் ஏரியில் குளிப்பது கிடையாது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் தண்ணீர் எடுக்க குளத்திற்கு வருவதில்லை. மேலும் ஊரில் யாராவது ஒரு துக்கம் நிகழ்ந்தால் சுடுகாட்டிற்கு சென்று இறுதிச் சடங்கு முடிக்கும் வரை குளத்தின் அருகில் யாரும் வருவதில்லை. அனைத்து சடங்கு முறைகளும் முடிந்த பின்னரே தண்ணீர் எடுக்க குளத்திற்கு வருகிறார்கள். இந்த மரபினை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியைச் சுற்றிலும் கடம்ப மரங்களும், தேத்தான்கொட்டை மரங்களும் வைத்து இயற்கையான முறையில் நீரைச் சுத்திகரிக்கும் முன்னோர்களின் பாரம்பரிய அறிவினை அறிவியல் அறிஞர்கள் பாராட்டுகின்றனர்.

Tags : ancestors , Ariyalur, bath water, purifying, ancestors
× RELATED மூதாதையரில் எத்தனை பேரைத் தெரியும்?