×

3 மாசமா சப்ளை ‘கட்’ குடிநீர் கோரி குடங்களுடன் முற்றுகை

திண்டுக்கல்: குடிநீர் கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை அனுமந்தராயன்கோட்டை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரெட்டியார்சத்திரம் அருகே அனுமந்தராயன்கோட்டை ஏடி காலனியை சேர்ந்த மக்கள் குடிநீர் கோரி காலி குடங்களுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் கலெக்டர் வினய்யிடம் மனு அளித்து விட்டு அவர்கள் கூறியதாவது, ‘எங்கள் பகுதிக்கு குடிநீர் வந்து 3 மாதமாகிறது. நல்ல தண்ணீர் மட்டுமின்றி, உப்புதண்ணீரும் இல்லை. குடிநீர் குடம் ரூ.10க்கு லாரிகளில் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அருகிலுள்ள தோட்டங்களுக்கு வாகனங்களில் சென்று குளிக்க வேண்டியுள்ளது. ஊராட்சி செயலாளரிடம் புகார் அளித்தால், அவர் கண்டுகொள்வதே இல்லை. இதனால் நாங்கள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளோம். பள்ளி செல்லும் குழந்தைகள், அலுவலகத்திற்கு செல்வோர் தினமும் பல இடங்களுக்கு சென்று தவம் கிடக்க வேண்டியுள்ளது. நாங்கள் பாலைவனத்தில் வசிப்பது போல உள்ளது. இந்த அவலத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம்’ என்றனர். மனுவை பெற்ற கலெக்டர், 15 நாட்களுக்குள் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Tags : Masala Supply Siege , Drinking water, Dindigul, Siege
× RELATED மக்களவைத் தேர்தல் வாக்கு...