×

மாவட்டத்தில் கலப்படம் செய்த தேயிலை தூள் தயாரித்தால் நடவடிக்கை

ஊட்டி: நீலகிரியில் தேயிலையில் கலப்படம் செய்வதற்காக யாரேனும் கலப்பட தேயிலை தூள் அல்லது வேறு பொருட்களை கொண்டு வந்தால், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் 80 சதவீதம் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பெரும் முதலாளிகள் முதல் சிறு மற்றும் குறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக தேயிலைக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் வெளி மாவட்டங்களுக்கு பிழைப்பு தேடிச் சென்று விட்டனர். இந்நிலையில், இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூளும் சர்வதேச மார்க்கெட்டில் விலை போவதில்லை. சில தனியார் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள் மட்டுமே விலை போகிறது. இந்நிலையில், சிலர் இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூளில் தொடர்ந்து கலப்படம் செய்து வருகின்றனர்.

இதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து தரம் குறைந்த தேயிலை தூள், புளியங்கொட்டை தோல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு வந்து இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலையுடன் கலப்படம் செய்கின்றனர். இதனால், சந்தையில் நீலகிரி தேயிலை தூள் என்றாலே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி சரக்கு ஏற்றி வந்த லாரியை அங்கு பணியில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் முருகன், ஜான்சி ராணி ஆகியோர் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதற்காக நிறுத்தி உள்ளனர். அப்போது அங்கிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் லாரியை சோதனை செய்தபோது அதில் மூட்டை மூட்டையாக கலப்பட தேயிலைத்தூள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து லாரி ஓட்டுனரிடம் கேட்டபோது, இதனை குன்னூருக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் கோத்தகிரி தேயிலை வாரிய அதிகாரிகள் மற்றும் கலெக்டர் அலுவலகத்துக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, கோத்தகிரி தேயிலை வாரிய உதவி இயக்குனர் செல்வம் தலைமையில் பாரதிராஜா மற்றும் சுமி குப்தா ஆகியோர் குஞ்சப்பனை சோதனைச்சாவடிக்கு சென்று பறிமுதல் செய்யப்பட்ட கலப்பட தேயிலைத்தூள் இருந்த லாரியை ஆய்வு செய்தனர். அதில் 5 டன் கலப்பட தேயிலைத்தூள் இருந்தது. மேலும் 100 மூட்டைகளில் தேயிலைத்தூளில் கலப்படம் செய்வதற்கான மூலப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து குன்னூர் தேயிலை வாரியத்துக்கு கொண்டு சென்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே போல் கொண்டுவரப்பட்ட கலப்பட தேயிலைத்தூள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கலப்பட தேயிலைத்தூள் எந்த தேயிலை தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது என தீவிர விசாரணை ெசய்து வந்தனர். இந்நிலையில், மீண்டும் கலப்பட தேயிலை தூள் கொண்டு வரப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் சில தொழிற்சாலைகளில் கலப்பட தேயிலை தூள் உற்பத்தி செய்வதற்காக வெளியூர்களில் இருந்து கலப்பட தேயிலை தூள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை தேயிலை வாரியம் பறிமுதல் செய்துள்ளது. எந்த தொழிற்சாலைக்கு கலப்பட தேயிலை தூள் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விவசாரணை நடக்கிறது. இனி வரும் காலங்களில் கலப்பட தேயிலை தூள் தயாரிப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Tags : district , Contamination, Tea Powder, Nilgiri
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...