நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மற்றும் 13 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்பு

சென்னை: நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மற்றும் 13 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்கின்றனர். தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 23ம் தேதி எண்ணி முடிக்கப்பட்டது. அதில் பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், திருவாரூர், குடியாத்தம், ஆம்பூர், தஞ்சாவூர், ஓசூர், அரவக்குறிச்சி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 13 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். சூலூர், பாப்பிரெட்டிப்பட்டி, நிலக்கோட்டை, பரமக்குடி, விளாத்திகுளம், சோளிங்கர், மானாமதுரை, அரூர், சாத்தூர் ஆகிய 9 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் 13 பேரும் இன்று காலை 11.30 மணி அளவில் சென்னை, தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் முன்னிலையில் உறுதிமொழி பிரமாணம் படித்து பதவியேற்றுக் கொள்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கட்சியின் முன்னணி தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து, நாளை (29ம் தேதி) காலை அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேரும் பதவியேற்றுக் கொள்கிறார்கள். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிமுக முன்னணி தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கு பின்பு தேர்தல் வந்ததன் காரணமாக அடுத்தகட்டமாக எப்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் மானிய கோரிக்கை மீதான விவாதம் எப்போது நடைபெறும் என கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த நிலையில் ஜுன் 10-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. மேலும் சபாநாயகர் மீது திமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்புக்கு நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தொடர் தொடங்கும் முதல் நாள் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு அதனை தொடர்ந்து அடுத்த நாள் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்புகள் உள்ளது.

Tags : DMK ,by-election , DMK,13 MLAs,sworn , by-election
× RELATED அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5...