×

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வீடு புகுந்து தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது: 12 சவரன் நகை, 750 கிராம் வெள்ளி பறிமுதல்

சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். நகர் மற்றும் கே.கே.நகர் பகுதிகளில் வீடு புகுந்து திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வந்தன. போலீசார் விசாரணையில், கே.கே.நகர் அம்பேத்கர் பாலம் அருகே சேலையூர் பாரதி நகரை சேர்ந்த வெங்கடேசன் (எ) கலசா வெங்கடேசன் (32) என்பவர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. அரை நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் எம்ஜிஆர் நகர், கே.கே.நகர், மேற்கு மாம்பலம், சிட்லபாக்கம், கூடுவாஞ்சேரி, சேலம், மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும், கொள்ளையடித்த நகைகளை மேட்டூரில் உள்ள அடகு கடை ஒன்றில் அடகு வைத்து அந்த பணத்தில் உல்லாசமாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை மேட்டூருக்கு அழைத்து ெசன்று 12 சவரன் நகை மற்றும் 750 கிராம் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர்.

* அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் அண்ணா தெருவை சேர்ந்த அமுதா (32) என்பவர் வீட்டின் பூட்டை நேற்று முன்தினம் இரவு உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த 5 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
* மதுரவாயல் அடுத்த வானகரம் மகரிஷி டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (40). இவரது மனைவி நான்சி (36). பள்ளி தலைமை ஆசிரியை. இவரது வீட்டு வளாகத்தில் வைத்திருந்த மின்மோட்டார் மற்றும் காஸ் சிலிண்டர்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
* சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தின் வெளிப்புறத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் மற்றும் இரும்பு தகடுகளை திருடிய செங்கல்பட்டு திருமணி புதுத்தெருவை சேர்ந்த குமார் (35), திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த அரிஹரன் (48) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
* அம்பத்தூர் ஏரியில் நேற்று 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் மிதந்தது. போலீசார், சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து சடலமாக கிடந்தவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
* குரோம்பேட்டை, நேரு நகர், பங்களா மலை தெருவை சேர்ந்த வேணுகோபால் (55) என்பவர், நேற்று காலை சிட்லபாக்கம், 1வது பிரதான சாலையில் சைக்கிளில் சென்றபோது, லாரி மோதி இறந்தார்.
* திருவொற்றியூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (35) ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இரவு இவரது ஆட்டோவில் சவாரி செய்த 4 பேர், பணம் கொடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டனர். இதனால், தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த 4 பேரும் ராஜேஷை கத்தியால் வெட்டி விட்டு தப்பினர். போலீசார் விசாரணையில், சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த அந்தோணி (26) மாரிமுத்து (26) முரளி(40) ராஜன் (32) ஆகியோர் ராஜேஷை கத்தியால் குத்தியது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.

20 சவரன், 60 ஆயிரம் கொள்ளை
கொடுங்கையூர் எழில் நகர் 18வது தெருவை சேர்ந்தவர் சதாம் உசேன் (20). ஏசி மெக்கானிக்.  இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு தொழுகைக்காக மசூதிக்கு சென்றார். இரவு அங்கேயே தங்கினார். காலையில் திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 20 சவரன்  நகை, ₹60 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : robbers ,robbery ,areas ,Chennai ,jewelery , Chennai ,suburban areas, robbery,confiscated
× RELATED முகப்பேரில் 17 சவரன் கொள்ளையில் கோவையில் 3 கொள்ளையர் கைது