தண்ணீர் வழங்காததை கண்டித்து குடிநீர் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

பெரம்பூர்: தண்டையார்பேட்டையில் முறையாக தண்ணீர் வழங்காததை கண்டித்து குடிநீர் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.தண்டையார்பேட்டை நேதாஜி நகர், இந்திரா காந்தி நகர், கருணாநிதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பட்டேல் நகர் குடிநீர் ஊற்று நிலையம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மேற்கண்ட பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

இதுபற்றி பலமுறை குடிநீர் வாரியத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதை கண்டித்து சுந்தரம்பிள்ளை நகர் 38வது வார்டு பகுதியில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தை அப்பகுதி மக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ, கார்களில் வந்து கும்பல் கும்பலாக முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.அப்போது, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் குடிநீர் கேட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ேமலும் உயரதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Drinking Water Board , Denounce, water ,Drinking Water , Charging Officers
× RELATED அதிபர் ட்ரம்புக்கு அளிக்கப்படும் விருந்தில் முதல்வர் பழனிசாமி?