×

ஜூன் 1ம் தேதி கூட்டணி அரசு கவிழவில்லை என்றால் அரசியலுக்கு முழுக்கு போட எடியூரப்பா தயாரா?: முன்னாள் முதல்வர் சித்தராமையா சவால்

மைசூரு: ‘‘கர்நாடகாவில் எடியூரப்பா சொல்வதுபோல் ஜூன் 1ம் தேதி கூட்டணி ஆட்சி கவிழவில்லை என்றால் அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இருந்து விலக தயாரா?’’ என்று முன்னாள் முதல்வர்  சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.மைசூரு மாவட்டம் மண்டகள்ளி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:கர்நாடகாவில், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் அமைச்சரவையில் மாற்றம், விஸ்தரிப்பு செய்வது ஆகியவை இப்போதைக்கு கிடையாது. மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு பின்னடைவு  ஏற்பட்டு இருந்தாலும் அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 5 ஆண்டுகள் கூட்டணி ஆட்சி தொடரும். முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி  உட்பட யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள். அனைவரும் கட்சியில் நீடிப்பார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுதாகரை சந்திக்க முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி அவரது வீட்டுக்கு  வந்துள்ளார். அப்போது சுதாகர் நான் முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்திக்க அவரது வீட்டுக்கு செல்வதாக தெரிவித்துள்ளார். இதற்கு ரமேஷ் ஜார்கிஹோளி, தானும் உடன் வருவதாக தெரிவித்துள்ளார். இதனால் இருவரும்  சேர்ந்து அங்கு சென்றனர். அப்போது முன்னாள் முதல்வர் எடியூரப்பா, எம்.எல்.ஏ. ஆர்.அசோக், மக்களவை உறுப்பினர் சுமலதா அம்பரீஷ் ஆகியோர் எஸ்.எம்.கிருஷ்ணா வீட்டில் இருந்துள்ளனர். இது எதிர்பாராத சந்திப்பு. இதற்கு அரசியல் சாயம்  பூச வேண்டாம்.

மாநில கூட்டணி அரசு வரும் ஜூன் 1ம் தேதி கவிழ்ந்து விடும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார். அவர் ஒரு வருடமாக இதுபோன்ற கருத்துக்கள் தெரிவித்து வருகிறார். ஆனால் அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.எடியூரப்பா சொல்வது  போல்  ஜூன் 1ம் தேதி ஆட்சி கவிழவில்லை என்றால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இருந்து விலக வேண்டும். அவரால் அப்படி செய்ய முடியுமா?. மக்களவை தேர்தலின் முடிவுகளால்  இ.வி.எம். இயந்திரத்தின் மீது தற்போதும் சந்தேகம் உள்ளது. ஆனால் மக்களின் தீர்ப்புக்கு கவுரவம் கொடுத்து வருகிறோம். நாடு முழுவதும் பல்வேறு  இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது.  அப்போது பிரதமர் நரேந்திரமோடி தனது பதவியை ராஜினாமா செய்தாரா? மக்கள் தீர்ப்புக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்றார்.

Tags : coalition government ,Siddaramaiah , coalition, government , politics , Siddaramaiah ,challenged
× RELATED பாஜக ஆட்சி ஒன்றியத்தில் அமையாமல்...