கோவை வேளாண் பல்கலை அறிவிப்பு நீலகிரி, தேனி உள்பட 7 மாவட்டத்தில் கூடுதலாக தென்மேற்கு பருவமழை

கோவை:  கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு ஆண்டு பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை தொடர்பாக தமிழ்நாடு வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், மார்ச், ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென்மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவில் இருந்து பெறப்பட்ட ‘மழை மனிதன்’ சாப்ட்வேர் மூலம் தென்மேற்கு பருவமழை குறித்து முன்னறிவிப்பு பெறப்பட்டது.  அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, சிவகங்கை, திருச்சி, கடலூர் மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் 1 முதல் 10 சதவீதம் கூடுதலாக பெய்யும். மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, அரியலூர், நாமக்கல் மாவட்டங்களில் சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை, சேலம், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் பகுதியில் சராசரியை விட 10% குறைவாகவும், விருதுநகர், கரூர், ஈரோடு, விழுப்பும், திருவண்ணாமலையில் 15% குறைவாகவும், ராமநாதபுரம், திருவாரூர், திருப்பூர், தர்மரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 25 சதவீதம் குறைவான மழை எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

× RELATED பாப்பம்பாடி வாரச்சந்தையில் வியாபாரிகளை மிரட்டி கூடுதலாக சுங்கம் வசூல்