×

தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க சசிகலா- டிடிவி தினகரன் இன்று சந்திப்பு

சென்னை: நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியையடுத்து பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று சந்திக்கிறார். நாடு முழுவதும் தேர்தல் முடிவு கடந்த 23ம் தேதி வெளியானது. தமிழகத்தை பொறுத்தவரை 38 நாடாளுமன்ற மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவும் வெளியிடப்பட்டது. இதில் திமுக கூட்டணி 38 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், அதிமுக 1 இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜ, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இதேபோல், டிடிவி.தினகரனின் அமமுகவும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வியையே சந்தித்தது. தங்கள் தொகுதியிலேயே மறுபடியும் போட்டியிட்ட தகுதி நீக்க எம்.எல்.ஏக்களும் தோல்வியை சந்தித்தனர். பல இடங்களில் 4வது இடத்திற்கு அமமுக தள்ளப்பட்டது. இது டிடிவி.தினகரனுக்கும், அவரை நம்பி வந்தவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்தநிலையில், தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை மேற்கொள்ள பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று சந்திக்க உள்ளார். அப்போது, தேர்தல் படுதோல்விக்கு காரணம் என்ன? உட்கட்சியில் நடைபெறும் குழப்பங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தேர்தல் தோல்வியால் சசிகலாவும் அதிருப்தியில் உள்ள நிலையில் தினகரனின் இந்த சந்திப்பு அமமுக வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

Tags : meeting ,Sisakala - DVV Dinakaran , Election failure, Sasikala, DTV Dinakaran, meeting
× RELATED இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்