×

கராத்தே போட்டியில் பங்கேற்க சென்று மலேசியாவில் சிக்கி தவித்த மாணவர்கள் மீட்பு

சென்னை: மலேசியாவில் தவித்த கராத்தே வீரர்கள் தமிழகம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மலேசியா நாட்டின் செலாங்கூரில் மே 12 முதல் 19 வரை நடைபெற்ற உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் ஆவடியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர். கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற 16 மாணவர்கள், அவர்களது 2 பயிற்சியாளர்கள், மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட 29 பேர் தாயகம் திரும்ப முடியாமல், கடந்த 22ம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் தவிப்பதாக தகவல் வந்தது.

இதையறிந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அந்த 29 பேரையும் உடனடியாக சென்னை திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு அவர்களுக்கான இருப்பிட வசதி, உணவு, சென்னை திரும்ப விமான பயணச்சீட்டுகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் துரிதமாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டது. தமிழக அரசின் துரித நடவடிக்கையால் 29 பேர் பாதுகாப்பாக கடந்த 23ம் தேதி சென்னை திரும்பினர். இதற்காக, கராத்தே போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர் உள்ளிட்ட 29 பேர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று முகாம் அலுவலகத்தில் சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாடுகளில் பணிபுரிந்த தமிழகத்தைச் சார்ந்த தொழிலாளர், மீனவர்கள் உள்ளிட்ட 221 பேர் மீட்கப்பட்டு பத்திரமாக தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : karate contest ,Malaysia , Karate competition, Malaysia, students rescue
× RELATED வெளிநாடு தப்ப முயன்ற குற்றவாளி சென்னையில் கைது