×

மக்களவை தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்ததால் கிராமங்களில் குடிநீர் சப்ளையை அதிமுகவினர் நிறுத்தி விட்டனர்: பார்த்திபன் எம்பி குற்றச்சாட்டு

சேலம்: சேலம் மாவட்டத்தில் பல கிராமங்களில் திமுகவுக்கு வாக்களித்ததால், குடிநீர் சப்ளையை அதிமுகவினர் நிறுத்தியுள்ளனர் என பார்த்திபன் எம்பி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றார். அவர், தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று அவர் கன்னங்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏவுடன் சென்று வாக்காளர்களுக்கு நன்றி கூறினார். வீதிவீதியாக நடந்து சென்று நன்றி தெரிவித்தபோது, பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றித் தருவேன் என்றும், குறிப்பாக குடிநீர் பிரச்னையை தீர்ப்பேன் என்றும் மக்கள் மத்தியில் பேசினார்.

பின்னர், கட்சி நிர்வாகிகளுடன் சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள அண்ணா சிலைக்கும், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பார்த்திபன் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது: வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தபின், சேலம் தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில் திமுகவிற்கு வாக்களித்த காரணத்திற்காக குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது.

அதிமுகவினர் கூறியதன் அடிப்படையில், டேங்க் ஆபரேட்டர்கள் இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். இது மிகவும் மலிவான அரசியல். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக மக்களுக்கு தண்ணீர் கிடைத்திட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்யவில்லை என்றால், கட்சி தலைமையிடம் அனுமதி பெற்று மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : villages ,DMK ,Parthiban MP ,Lok Sabha , Lok Sabha election, DMK, vote, drinking water supply in villages, AIADMK, parking, Parthiban MP, indictment
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு