×

மதுரை அருகே பரபரப்பு... தண்டவாளத்தில் கற்களை போட்டு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி

திருமங்கலம்: தண்டவாளத்தில் சிமென்ட் கற்களை போட்டு, தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்கும் முயற்சியில் சமூகவிரோதிகள் ஈடுபட்ட சம்பவம் மதுரை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரைவரின் சாமர்த்தியமாக ரயிலை இயக்கியதால் பயணிகள் உயிர் தப்பினர். கன்னியாகுமரி, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை மற்றும் நாட்டின் வட மாநிலங்களுக்கு தினமும் 15க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு தூத்துக்குடியில் இருந்த சென்னை புறப்பட்ட முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி-சிவரக்கோட்டை இடையே இரவு 10 மணியளவில் வந்து கொண்டு இருந்தது. அப்போது தண்டவாளத்தில் பெரிய, பெரிய சிமென்ட் கற்கள் குறுக்காக கிடந்ததை கண்ட ரயில் டிரைவர் அதிர்ச்சியடைந்தார். சிமென்ட் கற்கள் கிடந்ததை தொலைவில் இருந்த கவனித்து விட்ட டிரைவர், குறிப்பிட்ட வேகத்தில் ரயிலை இயக்கி, அப்பகுதியை சாமர்த்தியமாக கடந்தார். இதில் இன்ஜின் மோதியதில் பலத்த சத்தத்துடன் அந்த கற்கள் உடைந்து நொறுங்கின. டிரைவரின் சாமர்த்தியத்தால், ரயிலில் வந்த பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். பின்னர் திருமங்கலம் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்திய டிரைவர், தண்டவாளத்தில் சிமென்ட் தூண்களை போட்டு ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளதாக அதிகாரிகளிடமும், ரயில்வே போலீசாரிடமும் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இன்று அதிகாலை விருதுநகர் ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் இன்ஜின் மோதியதில் தண்டவாளத்தில் உடைந்து கிடந்த பெரிய சிமென்ட் கற்களை பார்வையிட்டனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில், நேற்று இரவு ஒரு கும்பல் அப்பகுதியில் அமர்ந்து மது அருந்தினர் என்றும், அந்த கும்பலை சேர்ந்தவர்கள்தான் ரயிலை கவிழ்க்க சதி வேலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் ரயில்வே போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 9ம் தேதி திருமங்கலம் அருகே ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் எதிர் எதிராக வந்தன. திருமங்கலம் அருகே உள்ள கேட் கீப்பர் உடனடியாக இது குறித்து திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனே 2 ரயில்களும் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. பின்னர் ஒரு ரயில் பின்நோக்கி திருமங்கலம் சென்றது. இதனால் பெரும் விபத்து தவிற்க்கப்பட்டது. இதில் கவனக்குறைவாக இருந்த ரயில்வே ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மதுரை மேலாளர் ஒருவர் திருச்சிக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று இரவு தண்டவாளத்தின் குறுக்கே கற்களை போட்டு, ரயிலை கவிழ்க்க நடந்த சதிச்செயலால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Madurai ,track , Tirumangalam, train
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...