×

நவமலையில் இருவர் பலி எதிரொலி... ஒற்றை காட்டு யானையை பிடிக்க கும்கி யானை வரவழைக்கப்பட்டது

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த நவமலையில் இருவரை கொன்ற காட்டு யானையை பிடிக்க கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் நவமலை மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் கடந்த சில மாதமாக ஒற்றை காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நவமலையில் வசிக்கும் முருகன் என்பவரது 7 வயது மகள் ரஞ்சனியை தாக்கி கொன்றது. இதையடுத்து நேற்று முன்தினம் அதே பகுதியில் வீட்டின் முன்பு படுத்திருந்த மாகாளி என்ற தொழிலாளியை மிதித்து கொன்றது. இவ்வாறு அடுத்தடுத்து நடந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று நவமலைக்கு சென்ற, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து, டிஎஸ்பி.விவேகானந்தன் உள்ளிட்ட அதிகாரிகளை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் மின்வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும், காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர். இதையடுத்து நவமலையில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையை கும்கி யானைகள் மூலம் பிடிக்க முடிவெடுத்துள்ளனர். இதற்காக வனத்துறையின் டாப்சிலிப்பிலுள்ள கோழிக்கமுத்தி முகாமில் உள்ள பரணி என்ற கும்கி யானையை நேற்று இரவு நவமலைக்கு கொண்டு வந்தனர். அதை தொடர்ந்து, மேலும் கலீம் என்கிற ஒரு கும்கி யானையையும் இன்று கொண்டு வருகின்றனர். பின்னர், 2 கும்கி யானைகளை கொண்டு 30 பேர் கொண்ட வனக்குழுவினர் காட்டு யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். காட்டுயானையை பிடித்து டாப்சிலிப் கோழிக்கமுத்தி முகாமிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

Tags : Wild elephant, Kumki
× RELATED இன்ஸ்பெக்டருடன் உல்லாசம் பெண் எஸ்ஐ அதிரடி டிரான்ஸ்பர்